விமானத்தின் அவசர வழி கதவை பாஜக எம்.பி தேஜஸ்வி யாதவ் திறக்கவேயில்லை என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னை – திருச்சி இடையே சென்ற இண்டிகோ விமானத்தில் லோக் சபா எம்.பி தேஜஸ்வி சூர்யா மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் பயணித்தபோது தேஜஸ்வி சூர்யா அவசர வழி கதவை திறந்ததாக வெளியான குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.
அதை அவர் தெரியாமல் செய்துவிட்டதாகவும், அதற்காக மன்னிப்பு கேட்டதாகவும் இண்டிகோ நிறுவனம் தெரிவித்திருந்தாலும், இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது. இது அறியாமல் நடந்த சம்பவம் என விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவும் கூறியிருந்தார்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ள தெஜஸ்வியுடன் இருந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை “தேஜஸ்வி சூர்யா படித்தவர். அவசர கதவை திறக்க வேண்டிய தேவை அவருக்கு இல்லை. கதவில் ஒரு இடைவெளி இருந்ததை கண்டு தேஜஸ்வி சூர்யா என்னிடம் சுட்டிக்காட்டினார். விமான குழுவிடமும் தெரிவித்தார். இதனால் உடனடியாக வெளியேற்றப்பட்டு பாதுகாப்பு சோதனைகள் நடந்தன. தேஜஸ்வி சூர்யா தவறு செய்ததாக மன்னிப்பு கேட்கவில்லை. அவர்மேல் தவறு இல்லாவிட்டாலும் எம்.பி என்ற பொறுப்பில் உள்ளதால் மன்னிப்பு கேட்டார்” என்று தெரிவித்துள்ளார்.