திமுக அரசுக்கு திராணி இருந்தால் என்னை கைது செய்யவும் என அண்ணாமலை சவால் விட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வட மாநில தொழிலாளர்கள் குறித்து நேற்று அண்ணாமலை அறிக்கை வெளியிட்ட நிலையில் அந்த அறிக்கையில் வட மாநில தொழிலாளர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசப்பட்டிருப்பதாக அண்ணாமலை மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இது குறித்து தனது ட்விட்டரில் கூறியிருப்பதாவது: "வட மாநிலத்தவர் குறித்து திமுக செய்த வெறுப்பு பிரச்சாரங்களை அறிக்கையாக வெளியிட்டிருந்தேன். அதற்காக என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிகிறேன். அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவையை காணொளியாகவும் வெளியிடுகிறேன். திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைது செய்யவும்."
மேலும் அவர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ஹிந்தி பேசும் வட மாநிலத்தவர் குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், முன்னாள் அமைச்சர் கே என் நேரு உள்பட ஒருசிலர் வட மாநில தொழிலாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய காட்சிகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.