முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் தற்போதைய பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர், "முதலமைச்சர் ஸ்டாலின் சாரி மட்டுமே கேட்பார்" என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூரில் அண்ணாமலை மற்றும் நயினார் நாகேந்திரன் ஆகிய இருவரும் கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது அண்ணாமலை, "திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு மிகவும் துயரமானது என்றும், ஏழு நாட்களாக குற்றவாளியை கைது செய்யாமல் இருக்கிறார்கள்" என்றும், "தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது" என்றும் தெரிவித்தார். இந்தச் சம்பவம் குறித்து இதுவரை முதலமைச்சர் ஸ்டாலின் பேசவில்லை என்றும், "அவர் சாரி மட்டுமே சொல்வார்" என்றும், "திமுக போலீசார் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டார்கள்" என்றும் தெரிவித்தார்.
மேலும், "திமுக உறுப்பினர்களாக பொதுமக்களை கட்டாயப்படுத்தி சேர்க்கிறார்கள் என்றும், திமுக உறுப்பினராக சேர்ந்தால்தான் தேர்தலின்போது பணம் கொடுப்போம் என்று மிரட்டி உறுப்பினராக சேர்க்கிறார்கள், இது வெட்கக்கேடு" என்றும் தெரிவித்தார். "மாம்பழத்தை கூவி கூவி விற்பதை போல திமுக உறுப்பினர்களை கூவி கூவி சேர்க்கிறார்கள்" என்றும் அவர் கிண்டல் அடித்தார்.
அதேபோல் பேசிய நயினார் நாகேந்திரன், "முதலமைச்சர் ஸ்டாலின் சாரி மட்டுமே கேட்பார், மற்றபடி எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்" என்று தெரிவித்தார். இருவரும் முதலமைச்சரை கிண்டல் அடித்துப் பேசி இருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.