அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், நேற்று ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் கீழே விழுந்ததால் இடது கை மற்றும் இடது கால் பகுதிகளில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த மாணவி ஒருவர் தனது சக மாணவரிடம் பல்கலை வளாகத்தில் பேசிக் கொண்டிருந்த போது திடீரென உள்ளே வந்த சில மர்ம நபர்கள் மாணவரை அடித்து விட்டு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகள் தேடப்பட்டு வந்த நிலையில், ஞானசேகரன் என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார். அவர் மீது ஏற்கனவே 25க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாகவும், அந்த பகுதியில் பிரியாணி கடை வைத்திருப்பதாகவும் விசாரணையில் தெரியவந்தது.
இந்த நிலையில், அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரனுக்கு காலில் மாவு கட்டு போடப்பட்டு இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. ஞானசேகரனை பிடிக்க முயன்ற போது அவர் தப்பி ஓடியதாகவும், அப்போது கீழே விழுந்ததில் இடது கை மற்றும் இடது கால் பகுதிகளில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் மாவு கட்டு போடப்பட்டிருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.