உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல், தமிழ்நாட்டில் சில இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றதால், ஆட்சியை கலைக்க வேண்டும் என விலங்கு நல ஆணையம் மத்திய அரசிற்கு கடிதம் எழுதியுள்ளது.
கடந்த 2 வருடங்களாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. அது தொடர்பான வழக்கில், பொங்கலுக்கு முன் தீர்ப்பை கூற முடியாது உச்ச நீதிமன்றம் நேற்று தெரிவித்தது. ஆனால், ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என தமிழக அரசியல்வாதிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக இளைஞர்களும், மாணவர்களும் தெருவில் இறங்கி போராட ஆரம்பித்துள்ளனர். சமீபத்தில் மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் பேரணிகளும் நடைபெற்றன.
இந்நிலையில், தடையை மீறி, நாம் தமிழர் கட்சி சார்பில் சமீபத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. அதேபோல் இன்று மதுரை கரிசளாகுளத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் இன்னும் சில இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் எனத்தெரிகிறது.
அதேபோல், ஆந்திராவில் தடையை மீறி சேவல் சண்டை சமீபத்தில் நடைபெற்றது. சில கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏக்களே முன்னின்று அந்த போட்டியை தொடங்கி வைத்தனர்.
இந்நிலையில், தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்திய தமிழகத்திலும், சேவல் சண்டை நடத்திய ஆந்திராவிலும், ஆட்சியை கலைத்துவிட்டு, குடியரசுத்தலைவர் ஆட்சியை அமுல்படுத்த வேண்டும் என இந்திய விலங்குகள் நல வாரியத்தின் உறுப்பினரும், வழக்கறிஞருமான என்.ஜி.ஜெயசிம்ஹ, உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மீறி மாநில அரசுகள் செயல்படுவது நமது ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கை எனவும், தமிழக, ஆந்திர அரசுகளின் மீது அரசியல் சாசனத்தில் 365 பிரிவு சட்டத்தை பயன்படுத்தி, ஆட்சியை கலைத்து விட்டு ஜனாதிபதி ஆட்சியை உடனடியாக அமல்படுத்த வேண்டும் எனவும் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.