அதிமுக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சசிகலாவின் தலைமைக்கு 75.13 சதவீத மக்கள் எதிப்பு தெரிவித்திருப்பது ஜூனியர் விகடன் நடத்திய சர்வே மூலம் தெரியவந்துள்ளது.
ஜெ.வின் மறைவிற்கு பின் அவரது தோழி சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும், அவரை முதல்வர் இருக்கையில் அமரவைக்க அதிமுக முக்கிய அமைச்சர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அதிமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் அவருக்கு ஆதரவாக நின்றாலும், கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் மத்தியில் அவருக்கு கடும் எதிர்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பிரபல வார இதழ் ஜூனியர் விகடன் சமீபத்தில் ஒரு சர்வே நடத்தியது. மொத்தம் 11 ஆயிரத்து 174 பேரிடம் சசிகலா முதல்வர் ஆவது பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதில் 75.13 சதவீத மக்கள் அவருக்கு எதிராக கருத்து தெரிவித்தனர். அவர் முதலமைச்சராக வரக்கூடாது என கருத்து தெரிவித்தனர்.
ஏற்கனவே அதிமுக தொண்டர்களிடன் நக்கீரன் நடத்திய சர்வேயில் 63 சதவீதம் பேர் சசிகலா தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதேபோல், மக்கள் நலனுக்காக போராடும் சட்ட பஞ்சாயத்து இயக்கம் சமீபத்தில் நடத்திய ஆன்லைன் சர்வேயில் சசிகலாவிற்கு எதிராக 97 சதவீதம் பேர் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.