மயிலாடுதுறையில் மேலும் ஒரு ஆட்டை கொன்ற சிறுத்தையை தேடும் பணி நான்காவது நாளாக தொடர்கிறது.
மயிலாடுதுறை மாவட்டம் நகரப் பகுதியில் உள்ள செம்மங்குளத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று சிறுத்தை ஒன்று புகுந்தது. அந்த பகுதியில் சுற்றித் திரிந்த தெரு நாய்களை வேட்டையாடும் வகையில் சிறுத்தை ஓடும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இது குறித்து போலீசாருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. சிறுத்தையின் கால்தடத்தை வைத்து அதன் நடமாட்டத்தை வனத்துறையினர் உறுதி செய்தனர்.
சித்தர்க்காட்டில் உள்ள தண்டபாணி செட்டி தெருவில் ஆடு ஒன்று கடித்து குதறிய நிலையில் உயிரிழந்து கிடந்தது. உயிரிழந்த ஆட்டை நேரில் பார்வையிட்டு வனத்துறையினர் ஆய்வு செய்தனர்.
மேலும் ஆரோக்கியநாதபுரம் பகுதியில் சுற்றித் திரியும் சிறுத்தை புலி பிடிப்பதற்கு வனத்துறை, தீயணைப்பு துறை, காவல்துறை ஆகிய துறைகளின் மூலம் 10 குழுக்கள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
விரைவில் இச்சிறுத்தை புலி பிடிக்கப்படும் என்றும் பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.