Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆவின் பால் கொள்முதல் ஓராண்டில் 10 லட்சம் லிட்டர் வீழ்ச்சி.. பாமக கண்டனம்..!

aavin
, வியாழன், 31 ஆகஸ்ட் 2023 (12:56 IST)
ஆவின் பால் கொள்முதல் ஓராண்டில் 10 லட்சம் லிட்டர் வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும்,  கொள்முதல் விலையை உயர்த்தி, கொள்முதலை அதிகரிக்க வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
தமிழ்நாட்டில் ஆவின் பால் விற்பனை கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும் போது நடப்பு ஆகஸ்ட் மாதத்தில்  7 விழுக்காடு  அதிகரித்திருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 14.96 லட்சம் லிட்டராக இருந்த  ஆவின் பால் விற்பனை  இப்போது 16.10 லட்சம் லிட்டராக  அதிகரித்திருக்கிறது. ஆவின் பால் விற்பனை அதிகரித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
 
ஆவின் பால் விற்பனை அதிகரித்திருக்கும் நிலையில்,  ஆவின் பால் கொள்முதல்  கடுமையாக வீழ்ச்சியடைந்திருக்கிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 38.21 லட்சம் லிட்டராக இருந்த  பால் கொள்முதல், நடப்பு ஆகஸ்ட் மாதத்தில் 28.78 லட்சம் லிட்டராக குறைந்திருக்கிறது.  தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பால் உற்பத்தியில் வெறும் 12% மட்டும் தான்  ஆவின் நிறுவனத்தால்  கொள்முதல் செய்யப்படுகிறது.  தமிழ்நாடு முழுவதும் வலுவான கட்டமைப்பைக் கொண்டுள்ள ஆவின்  நிறுவனத்தால், மொத்த உற்பத்தில் 12 விழுக்காட்டை மட்டுமே கொள்முதல் செய்ய முடிகிறது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
 
தமிழ்நாட்டில் 8,000-க்கும் கூடுதலான கிராமங்களில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கங்கள் இன்னும் தொடங்கப்படவில்லை. அதனால், அந்த கிராமங்களில்  உற்பத்தி செய்யப்படும் பால் முழுவதும் தனியார் நிறுவனங்களால் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆவின் நிறுவனத்தை விட,  தனியார் நிறுவனங்கள் பாலுக்கு கூடுதல் கொள்முதல் விலை வழங்குவதும் இதற்கான காரணங்களில் மிகவும் முதன்மையானதாகும். இந்த குறைகளை களையாவிட்டால் ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதல் அளவை அதிகரிக்க முடியாது.
 
ஆவின் பால் விற்பனையை ஓராண்டுக்குள் 7% அதிகரிக்க முடிகிறது என்றால், ஆவின் பால் மற்றும் பால் பொருட்களுக்கு மக்களிடம் அதிக வரவேற்பு இருப்பதாகத் தான் பொருள்.  மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் அளவுக்கு ஆவின் நிறுவனம் அதன் உற்பத்தியை அதிகரித்தால் அதன் விற்பனையையும், வருவாயையும் கணிசமாக அதிகரிக்க முடியும். ஆனால், பால் கொள்முதலை அதிகரிக்காமல், இவற்றை சாதிக்க முடியாது.
 
ஆவின் நிறுவனம் பால் கொள்முதல் விலையை உயர்த்துவதன் மூலம் தான், பால் கொள்முதலை அதிகரிக்க முடியும்.  பால் கொள்முதல் அதிகரிக்கப்பட்டால், ஆவின் பால் மற்றும் பால் பொருட்களின்  விற்பனை பெருமளவில் அதிகரிக்கும். அதுவே ஆவின் நிறுவனம்  தமிழக பால் சந்தையில் முதலிடத்தை பிடிக்க முடியும். அதைக் கருத்தில் கொண்டு பால் கொள்முதலை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை ஆவின் நிறுவனமும், தமிழக அரசும் மேற்கொள்ள வேண்டும்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை எந்த நீதிமன்றம் விசாரிப்பது? தொடரும் குழப்பம்..!