Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வன்னிய மக்களுக்கு தொடர்ந்து சமூக அநீதி இழைத்து வருகிறது திமுக.. அன்புமணி குற்றச்சாட்டு..!

Advertiesment
Anbumani

Mahendran

, திங்கள், 8 ஜூலை 2024 (14:31 IST)
மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20%  இட ஒதுக்கீட்டில்  வன்னியர்களுக்கு 10.50%  இட ஒதுக்கீடு கிடைக்கவில்லை என்பதை ஒப்புக்கொண்டது  திமுக - விக்கிரவாண்டி
தேர்தலில்  மக்கள் சரியான  பாடம் புகட்டுவார்கள்!
 
திமுக ஆட்சியில் விழுப்புரம் மாவட்டத்திலும்,  விக்கிரவாண்டி தொகுதியிலும்  செயல்படுத்தப்பட்ட முத்தான திட்டங்கள் என்ற பெயரில் ஒரு பட்டியலை திமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதில், கலைஞர் வழங்கிய 20  விழுக்காடு இடஒதுக்கீட்டால் ஏற்பட்ட பயன்  என்ற தலைப்பில்  வெளியிடப்பட்டுள்ள புள்ளி விவரங்களில், மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கையில்  மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டில்  வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீடு கிடைக்கவில்லை என்பதை  திமுக தலைமை  வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருக்கிறது.  தங்களால் இழைக்கப்பட்ட சமூக அநீதியை  ஒப்புக்கொண்டதன் மூலம் இதுவரை  திமுக போட்டு வந்த சமூகநீதி வேடம் கலைந்திருக்கிறது.
 
 கலைஞர் வழங்கிய 20  விழுக்காடு இடஒதுக்கீட்டால் ஏற்பட்ட பயன்  என்ற தலைப்பில்  வெளியிடப்பட்டுள்ள புள்ளி விவரங்களில்,’’தமிழ்நாட்டில் உள்ள வன்னியர் உட்பட மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், சீர்மரபினருக்கும் 1989இல்  20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது தி.மு.க. 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதால் 1988-1989 ஆம் ஆண்டில் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 68 என்பது இந்த இட ஒதுக்கீடு வழங்கப்பட்டபின் 1989-1990இல் 187 ஆக உயர்ந்தது. இவர்களில் வன்னிய மாணவர்களின் எண்ணிக்கை 26 என்பது 74 ஆக ஏறத்தாழ மூன்று மடங்கு உயர்ந்தது.
 
இதேபோல், பொறியியல் கல்லூரியில் 1988-1989இல் 354 ஆக இருந்த மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் சேர்க்கை 1989-1990இல் 685 ஆக உயர்ந்தது.  இவர்களில் வன்னிய மாணவர்களின் எண்ணிக்கை 109 என்பது 292 ஆக ஏறத்தாழ 3 மடங்கு உயர்ந்தது” என்று கூறப்பட்டிருகிறது.
 
திமுக வெளியிட்ட புள்ளிவிவரங்கள் கல்வியில் வன்னியர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை என்பதை  அப்பட்டமாக உணர்த்துகின்றன.  20% இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு, அந்த இட ஒதுக்கீட்டில் 187 மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர்.  அப்படியானால், வன்னியர்களுக்கு 10.50% என்றால்,  குறைந்தது 98 மருத்துவ இடங்கள் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், 74 இடங்கள் மட்டும் தான் கிடைத்துள்ளன. இது வெறும் 7.91% மட்டும் தான்.
 
அதேபோல், பொறியியல் மாணவர் சேர்க்கையில், 20% இட ஒதுக்கீட்டின் கீழ் மிகவும் பிற்படுத்தப்பட்ட  வகுப்பினருக்கு 685 இடங்கள் கிடைத்தன் என்றால்,  வன்னியர்களுக்கு 10.50% என்றால்  360 இடங்கள் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், பொறியியல் கல்லூரிகளில் வன்னியர் மாணவர்களுக்கு கிடைத்துள்ள இடங்களின் எண்ணிக்கை வெறும் 292 தான். இது 8.52% மட்டும் தான்.  
 
இதன் மூலம் வன்னியர்களுக்கான பிரதிநிதித்துவம் ஒற்றை இலக்கத்தைத் தாண்டவில்லை என்பதையும்,  வன்னியர்களுக்கு 10.50% க்கும் கூடுதலான இட ஒதுக்கீடு கிடைப்பதாக சட்டப்பேரவையில் திமுக அமைச்சர்கள் கூறியது அப்பட்டமான பொய் என்பதையும்  திமுக தலைமை ஒப்புக்கொண்டுள்ளது. 
 
திமுக வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் 1989-90 ஆம் ஆண்டுக்கானவை.  அந்த ஆண்டிலேயே வன்னிய மாணவர்களுக்கு  8% என்ற அளவில் தான் பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது. அதற்கு அடுத்து வந்த ஆண்டுகளில், திமுக அரசு மேற்கொண்ட சமூக அநீதி நடவடிக்கைகள் காரணமாக,  பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பலர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்ற பெயரில் சாதி சான்றிதழைப் பெற்று  20% இட ஒதுக்கீட்டை சூறையாடினர். அதனால் வன்னியர்களுக்கான பிரதிநிதித்துவம் மேலும் குறைந்திருக்கிறது.
 
இப்படியாக வன்னிய மக்களுக்கு தொடர்ந்து சமூக அநீதி இழைத்து வரும் திமுகவுக்கு  விக்கிரவாண்டி  தொகுதி இடைத்தேர்தலில் வன்னிய மக்கள் மறக்க முடியாத பாடம் புகட்டுவார்கள் என்பது உறுதி.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அசாமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ராகுல் காந்தி ஆறுதல்..! விரைந்து இழப்பீடு வழங்க வலியுறுத்தல்..!!