Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காவிரி சிக்கலில் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும்! அன்புமணி

காவிரி சிக்கலில் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?  அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும்! அன்புமணி
, திங்கள், 21 ஆகஸ்ட் 2023 (13:29 IST)
காவிரி சிக்கலில் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?  அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தராமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டுமோ, அவை அனைத்தையும் கர்நாடக அரசு திட்டமிட்டு செய்து கொண்டிருக்கிறது.  காவிரியில் தமிழ்நாட்டிற்கு திறந்து விட கர்நாடக அணைகளில் தண்ணீர் இல்லை என்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்ற காவிரி ஆணையத்தின் ஆணையை ரத்து செய்ய வேண்டும்; மேகதாது அணை கட்ட அனுமதிக்க வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள கர்நாடக அரசு, இன்னொருபுறம் கர்நாடகத்தின் பல பகுதிகளில்  தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதற்கு எதிராக போராட்டங்களையும் தூண்டி விட்டு வருகிறது. கர்நாடகத்தின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.
 
கர்நாடகம் இவ்வாறு செய்வதன் நோக்கம் காவிரி பிரச்சினையில் தமிழ்நாட்டிற்கு எதிரான மனநிலையை உருவாக்குவது தான். இந்த நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக  காவிரி சிக்கல் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தையும் வரும் 23-ஆம் தேதி கர்நாடகம் கூட்டியிருக்கிறது. காவிரி பிரச்சினையை கர்நாடக அரசு  திட்டமிட்டு அரசியலாக்கி வரும் நிலையில், இதை தமிழ்நாடு எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது? தங்களின் நலன்களை எவ்வாறு காப்பாற்றப் போகிறது? என்ற வினா தமிழ்நாட்டில் உள்ள உழவர்கள் மனதில் எழுந்திருக்கிறது.
 
காவிரி பாசன மாவட்டங்களில் கருகும் நிலையில் உள்ள குறுவை பயிர்களை காப்பாற்ற முடியுமா? என்பதே தெரியவில்லை. சம்பா பருவம் இன்னும் சில வாரங்களில் தொடங்கவுள்ள நிலையில், காவிரியில் தண்ணீர் இல்லாததால் அது சாத்தியமாகுமா? என்பதும் தெரியவில்லை. பெரும்பான்மையான  உழவர்கள்  சம்பா சாகுபடி செய்ய ஆர்வம் காட்டவில்லை என்பது தான் களநிலைமை ஆகும். அனைத்து நெருக்கடிகளையும் சமாளித்து, குறுவைப் பயிர்களை காப்பாற்றவும், சம்பா சாகுபடியை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை ஆகும்.
 
காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் உரிமைகளை நிலை நிறுத்தவும்,  தமிழக விவசாயிகளின் நலன்களைக் காப்பாற்றவும் தேவையான  நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். அதுகுறித்து விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உடனடியாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுகவின் நீட் தேர்வு ரத்து முயற்சி படுதோல்வி: நயினார் நாகேந்திரன்