Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காமராஜர் ஏசியிலதான் தூங்குவாரா? அவரை அசிங்கப்படுத்துவதே திமுகதான்! மன்னிப்பு கேட்கணும்! - அன்புமணி ஆவேசம்!

Advertiesment
anbumani ramadoss

Prasanth K

, வியாழன், 17 ஜூலை 2025 (10:17 IST)

தமிழக முன்னாள் முதல்வர் காமராசர் ஏசி அறையில் தூங்கியதாகவும், இறக்கும் தருவாயில் கருணாநிதியிடம் பேசியதாகவும் உண்மைக்கு புறப்பான கருத்துகளை பேசிய திருச்சி சிவாவும், திமுகவும் மன்னிப்பு கேட்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பாமக செயல் தலைவர் அன்புமணி ராமதாஸ் “தமிழ்நாட்டின் தன்னிகரற்ற தலைவராக போற்றப்பட்டும்  பெருந்தலைவர் காமராசர் அவர்களின் புகழுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் திமுக  துணைப் பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான  திருச்சி சிவா அவர்கள் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது. கர்மவீரர் காமராசர் அவர்களை இழிவுபடுத்தும் வகையிலான எந்தச் செயலையும் அனுமதிக்க முடியாது. 

 

சென்னையில் நேற்று முன்நாள் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய  திருச்சி சிவா, ‘‘காமராஜர் மின்சார தட்டுப்பாடு என்று தமிழ்நாடு முழுவதும் கண்டனம் கூட்டம் நடத்தினார். காமராஜருக்கு ஏசி இல்லையென்றால் உடம்பில் அலர்ஜி வந்துவிடும். அதற்காக அவர் தங்குகிற அனைத்து பயணியர் விடுதிகளிலும் குளிர்சாதன வசதி செய்ய உத்தரவிட்டார். கலைஞரின் பெருந்தன்மையை பார்த்து நெகிழ்ந்து போன காமராஜர், உயிர் போவதற்கு முன்பு, அப்போதைய தமிழக முதல் அமைச்சர் கருணாநிதியின் கைகளை பிடித்துக் கொண்டு நாட்டையும் ஜன நாயகத்தையும் நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் என்று கூறினார்” என்று குறிப்பிட்டிருந்தார். 

 

திருச்சி சிவாவின் கருத்துகள் அநாகரீகமானவை. காமராசர் எந்தக் காலத்திலும் ஆடம்பரங்களை  விரும்பியதில்லை. முதலமைச்சராகவும், இந்தியாவையே ஆட்சி செய்த  காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் பணியாற்றிய  காமராசர் அவர்கள் நினைத்திருந்தால்  அனைத்து வசதிகளுடனும் வாழ்ந்திருக்கலாம்; ஆனால், அவர் எளிமையின் வடிவமாகத் தான் வாழ்ந்து மறைந்தார். அதேபோல், காமராசர் உயிருடன் இருந்த போதே அவரை தரக்குறைவான வார்த்தைகளால்  திமுக தலைமை விமர்சித்தது வரலாற்றில் பதிவாகியிருக்கிறது.  அப்படி இருக்கும் போதே கலைஞரின் கைகளை பிடித்துக் கொண்டு நாட்டையும் ஜன நாயகத்தையும் நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் என்று காமராசர் கூறியதாக  திருச்சி சிவாவுக்கு யார் கூறியது என்று தெரியவில்லை. 

 

பெருந்தலைவர் காமராசர் உயிருடன் இருந்த போதே அவரை மிக மோசமான வார்த்தைகளில் விமர்சித்தவர்கள் திமுகவினர் தான். அவர் மறைந்து அரை நூற்றாண்டாகியும்  அவரை களங்கப்படுத்தும்  செயல்களில் திமுகவினர் ஈடுபடுவதை அனுமதிக்க முடியாது. திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக இருந்த பொன்முடி அவர்கள், சில சமூகங்களையும், பெண்களையும் இழிவுபடுத்தும் வகையில்  பேசியதால் தான் அமைச்சர் பொறுப்பில் இருந்தும், துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக திமுக துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட  திருச்சி சிவாவும்  அதே போன்று பேசுவதிலிருந்தே  திமுக எத்தகைய நாகரீகத்தைக் கடைபிடிக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும். 

 

திமுக பொதுக்கூட்ட உரை குறித்து நேற்று இரவு அளித்த விளக்கத்தில் கூட, காமராசர் குறித்து தாம் பேசிய கருத்துகள் தவறு என்றோ, அதற்காக மன்னிப்புக்  கேட்டுக் கொள்வதாகவோ திருச்சி சிவா தெரிவிக்கவில்லை. அவரை கட்சித் தலைமையும் கண்டிக்கவில்லை. இதிலிருந்தே பெருந்தலைவர் காமராசரை  திமுக எந்த அளவுக்கு மதிக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். பெருந்தலைவர் காமராசர் குறித்து இழிவாக பேசியதற்காக  திருச்சி சிவா அவர்களை திமுக தலைமை கண்டிக்க வேண்டும்; திருச்சி சிவாவின் செயலுக்காக அவரும்.  திமுக தலைமையும்  தமிழ்நாட்டு மக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கீழடி ஆய்வின் உண்மையை மறைக்க மத்திய அரசு முயற்சி!? - கீழடி ஆய்வாளர் அமர்நாத் ஆவேசம்!