கொரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சசிக்கலா டிஸ்சார்ஜ் ஆக உள்ள நிலையில் அவரை வரவேற்க தமிழக எல்லையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிக்கலா விடுதலை செய்யப்பட்ட நிலையில் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவரது உடல்நிலை குணமடைந்துள்ள நிலையில் இன்று அல்லது நாளை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதும் பெங்களூரில் உள்ள பண்ணை இல்லத்தில் சசிக்கலா சில நாட்கள் ஓய்வெடுத்துவிட்டு பின்னர் பிப்ரவரி 4 அல்லது 5ம் தேதி சென்னை வர உள்ளார். கிருஷ்ணகிரி வழியாக வரும் அவருக்கு தமிழக எல்லையில் கோலாகலமான வரவேற்பு அளிக்க அமமுக தயாராகி வருகிறது.
பெங்களூரிலிருந்து சென்னை செல்லும் சசிக்கலாவிற்கு 66 இடங்களில் வரவேற்பு அளிக்க உள்ளதாகவும், எல்லா இடங்களில் 5 நிமிடங்கள் நின்று அவர்களது வரவேற்பை சசிக்கலா ஏற்றுக்கொள்ள உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதுதவிர கர்நாடக – தமிழக எல்லையான ஜூஜூவாடி பகுதியில் 2 ஏக்கர் நிலம் சமன்செய்யப்பட்டுள்ளதாகவும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை திரட்டி சசிக்கலாவிற்கு உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.