உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் சூழலில் அதிமுக, திமுகவிற்கு பிறகு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நாம் தமிழர் கட்சி பின்னடைவை சந்துத்துள்ளது.
ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றன. இதற்கான வாக்குகளை எண்ணும் பணிகள் இன்று நடைபெற்று வருகிறது.
தற்போதுவரை எண்ணப்பட்டுள்ள வாக்குகளில் ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் அதிமுக 59 இடங்களில் முன்னிலையிலும், திமுக 41 இடங்களில் முன்னிலையும் பெற்றுள்ளன. இதற்கு அடுத்து டிடிவி தினகரனின் அமமுக கட்சி இரண்டு இடங்களில் முன்னிலையில் உள்ளது. சீமானின் நாம் தமிழர் கட்சி எந்த இடத்திலும் முன்னிலை வகிக்கவில்லை.
மக்களவை தேர்தலில் திமுக, அதிமுகவிற்கு பிறகு அதிக வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தில் இருந்தது நாம் தமிழர் கட்சி. இதனால் உள்ளாட்சி தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி சில இடங்களிலாவது வெற்றி அல்லது முன்னிலை பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி நாம் தமிழர் ஒரு இடத்தில் கூட முன்னிலை பெறாத நிலையில் அமமுக 2 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
டிடிவி தினகரன் கட்சிக்கான சின்னம் ஒதுக்குதல் விவகாரம் உள்ளிட்டவற்றால் கடந்த சில மாதங்களில் மக்களுடன் பெரிய தொடர்பில் இல்லாவிட்டாலும், தற்போது மெல்ல எழுந்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசிக் கொள்ளப்படுகிறது.