தமிழக சட்டமன்ற தேர்தல் ஒரு பக்கம் நெருங்கி வர, மறுபக்கம் தமிழக அரசியல் கட்சிகளுக்குள்ளேயே ஏற்பட்டு வரும் கூச்சல், குழப்பங்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
சமீபமாக மதிமுகவில் மல்லை சத்யா - துரை வைகோ இடையே முரண்பாடுகள் எழுந்து வந்த நிலையில், வைகோவே தனது தளபதி என வர்ணித்த மல்லை சத்யாவை துரோகி என்று கூறியது மதிமுகவினரே எதிர்பாராத அதிர்ச்சி சம்பவமாக அமைந்தது. அதை தொடர்ந்து மிக நீண்ட அறிக்கை வெளியிட்ட மல்லை சத்யா, தனக்கு துரோகி பட்டம் கட்டியதை விட விஷத்தை கொடுத்துக் கொன்றிருக்கலாம் என்று வேதனைப்பட்டார். அதேசமயம் அவர் திமுகவிற்காக செயல்படுகிறார் என்றும், திமுகவிற்கு செல்லப்போகிறார் என்றும் சிலர் பேசி வந்தனர்.
இதுகுறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய மல்லை சத்யா “இது பச்சைப் பொய். தோழமை கட்சியான திமுக, மதிமுகவிற்குள் ஸ்லீப்பர் செல்லை அனுப்புமா? கூட்டணியில் உள்ள ஒரு கட்சியை இந்த பார்வையுடனா அணுகுவது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் தனது செல்போனை மதிமுகவில் சிலர் ஒட்டுக் கேட்டதாகவும் அப்போதும் தன்மீது அவர்களால் குற்றத்தை நிரூபிக்க முடியவில்லை என்றும் பேசிய மல்லை சத்யா, ”30 ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்த எனக்கு வாய்ப்பிருந்தால் ஒரு ராஜ்யசபா சீட் வாங்கிக் கொடுங்கள்” என தான் கேட்டதற்கு பிறகு தன் மீதான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.
Edit by Prasanth.K