Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு போதுமான அளவு நிதி ஒதுக்குங்கள்.! மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!

Advertiesment
MK Stalin

Senthil Velan

, திங்கள், 19 ஆகஸ்ட் 2024 (15:03 IST)
தமிழகத்தில் புதிய ரயில்வே வழித்தடங்கள், இருவழிப்பாதை மற்றும் வாடிக்கையாளர்களுக்கான வசதிகள் தொடர்பான திட்டங்களுக்கு போதுமான அளவுக்கு நிதி ஒதுக்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
 
இதுதொடர்பாக, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு இன்று எழுதியுள்ள கடிதத்தில், “2024-2025 நிதியாண்டில் வழக்கமான ரயில்வே பட்ஜெட்டில், தெற்கு ரயில்வே திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறிப்பிடத்தக்க அளவுக்குக் குறைந்திருப்பதால், அதன் விளைவாக தமிழகத்தில் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதில் தாக்கம் ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
 
தமிழகத்தில் புதிய வழித்தடங்கள், இரட்டைப் பாதை மற்றும் வாடிக்கையாளர்களுக்கான வசதிகள் தொடர்பான திட்டங்களுக்குப் போதுமான அளவுக்கு நிதி ஒதுக்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். 2024-2025 நிதியாண்டுக்கான இந்திய ரயில்வே-க்கான வழக்கமான பட்ஜெட்டில், சில கணக்குத் தலைப்புகளின்கீழ் தெற்கு ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
அதே ஆண்டின் இடைக்கால பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ஒதுக்கீடுகளுடன் ஒப்பிடும்போது இது மிகக் குறைவு என்றும் கணக்குத் தலைப்பு 11-புதிய பாதைகள் என்பதன்கீழ் இடைக்கால ஒதுக்கீடாக 976.1 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், வழக்கமான பட்ஜெட் ஒதுக்கீட்டில் வெறும் 301.3 கோடி ரூபாய்தான் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கணக்கு தலைப்பு 15-இரட்டைப் பாதையாக்கல் என்பதன் கீழ் இடைக்கால ஒதுக்கீடாக 2,214.4 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், வழக்கமான பட்ஜெட் ஒதுக்கீட்டில் 1,928.8 கோடி ரூபாய்தான் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்று அவர் கூறியுள்ளார். 

மேற்கண்ட நிதி ஒதுக்கீட்டில், புதிய வழித்தடத் திட்டங்களுக்கான ஒதுக்கீட்டில் ரூ.674.8 கோடி அளவுக்கு அதிரடிக் குறைப்பு செய்யப்பட்டுள்ளதால், தமிழகத்தில் நடைபெற்று வரும் பல முக்கியத் திட்டங்களின் முன்னேற்றம் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் அந்த வகையில், திண்டிவனம்-செஞ்சி-திருவண்ணாமலை, திண்டிவனம்-நகரி, அத்திப்பட்டு-புத்தூர், ஈரோடு-பழனி, சென்னை-கடலூர்-மகாபலிபுரம், மதுரை-தூத்துக்குடி (வழி-அருப்புக்கோட்டை), ஸ்ரீபெரும்புதூர்-கூடுவாஞ்சேரி-இருங்காட்டுக் கோட்டை-ஆவடி-ஸ்ரீபெரும்புதூர் ஆகிய ஏழு முக்கிய திட்டங்கள் பாதிக்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
அதேபோல், இரட்டைப் பாதைத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை 285.64 கோடி ரூபாய் அளவுக்குக் குறைத்திருப்பது, தமிழகத்தில் மிகவும் அத்தியாவசியமாக உள்ள இரட்டைப் பாதை திட்டங்களைச் செயல்படுத்துவதை நிச்சயம் தாமதப்படுத்தும் என்று அவர் கூறியுள்ளார். அந்த வகையில், விழுப்புரம்-திண்டுக்கல், திருவள்ளூர்-அரக்கோணம் (4-வது லேன்), ஓமலூர்-மேட்டூர் அணை, திருவனந்தபுரம்-கன்னியாகுமரி, மதுரை-மணியாச்சி-தூத்துக்குடி, மணியாச்சி-நாகர்கோவில், சேலம்-மேக்னசைட் சந்திப்பு-ஓமலூர், காட்பாடி-விழுப்புரம், சேலம்-கரூர்-திண்டுக்கல், ஈரோடு-கரூர், சென்னை கடற்கரை-சென்னை எழும்பூர், அரக்கோணம் யார்டு சாலை 1 மற்றும் 2-க்கு, 3 வது மற்றும் 4 வது வழித்தடம் இணைப்பு போன்ற திட்டங்கள் பாதிக்கப்படும் என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
 
மேலும், சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகள் தொடர்பாக தெற்கு ரயில்வேயில் நிலுவையில் உள்ள முக்கிய பிரச்சினைகள் குறித்து எடுத்துரைக்க விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ள முதல்வர், குறிப்பாக, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், மின்சாரப் பேருந்து சேவைகள், பெருந்திரள் துரித ரயில் போக்குவரத்துத் திட்டத்தை மாநில அரசிடம் ஒப்படைப்பது போன்ற பணிகள் எவ்வித தாமதமும் இன்றி விரைவுபடுத்தப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

 
மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, தமிழகத்தில் புதிய வழித்தடங்கள், இருவழிப்பாதை மற்றும் வாடிக்கையாளர்களுக்கான வசதிகள் தொடர்பான திட்டங்களுக்கு போதுமான அளவுக்கு நிதி ஒதுக்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும். நிதிப் பற்றாக்குறை காரணமாக இந்த முக்கியத் திட்டங்களை மேலும் தாமதப்படுத்தக் கூடாது என்றும், இது தொடர்பாக ரயில்வே அமைச்சர் தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தனது  கடிதத்தில் வலியுறுத்தி உள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மம்தாவை நோக்கி கைநீட்டி பேசுபவர்களின் விரல்கள் உடைக்கப்படும்.! திரிணாமூல் அமைச்சர் சர்ச்சை பேச்சு..!!