Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நீட் தேர்வுக்காக அனைத்து கட்சி கூட்டம்: வெற்று விளம்பர மாடல் தி.மு.க அரசின் கபட நாடகம்: விஜய்

Advertiesment
நீட்

Siva

, புதன், 9 ஏப்ரல் 2025 (19:46 IST)
நீட் தேர்வுக்காக அனைத்து கட்சி கூட்டம்: வெற்று விளம்பர மாடல் தி.மு.க அரசின் கபட நாடகம் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
மீண்டும் மீண்டும் நீட் தேர்வு அரசியல் மோசடி: தி.மு.க. தலைமை. மக்களிடமும் மாணவர்களிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்! ஆட்சிக்கு வருவதற்காக ஒரு பெரும் பொய், ஆட்சிக்கு வந்ததும் அதைவிட இன்னும் மிகப் பெரிய பொய் என்பதே தி.மு.க. தலைமையின் அறமற்ற அரசியல். பொய்வேடம் தரிக்கும் கபட நாடகத் தி.மு.க. தலைமையின் பொய்முக வரலாறு. அன்றில் இருந்து இன்றுவரை நில்லாமல் நீள்கிறது.
 
எப்படியும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக நூற்றுக்கணக்கானப் பொய்களின் பட்டியலைத் தேர்தல் அறிக்கையாக 2021 தேர்தலின்போது(ம்) வெளியிட்டது. அப்பட்டியலின் முக்கியப் பொய்களில் ஒன்றுதான் நீட் தேர்வை ரத்து செய்யும் முயற்சி (வாக்குறுதி எண்: 160) என்ற அறிவிப்பு. அத்துடன் தேர்தல் களத்தில், நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் தங்களிடம் இருப்பதாகச் சொல்லி மோசடிப் பிரசாரம் வேறு.
 
ஆட்சிக்கு வந்ததும், நீட் தேர்வை நீக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை; அது ஒன்றிய அரசின் அதிகாரத்தின்கீழ் உள்ளது என்று சொல்லித் தப்பித்தனர். பொய்களாலும் மோசடிகளாலும் மக்களை ஏமாற்றி நான்கு ஆண்டுகளாகத் தப்பித்தவர்கள். இதோ இப்போது 2026 தேர்தல் நெருங்குவதால், மீண்டும் நீட் போராட்டம் முடிந்துவிடவில்லை என்று நீட்டி முழக்குகின்றனர். அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்களுடனான கலந்தாலோசனைக் கூட்டம் என்ற ஓர் நாடகத்தையும் இப்போது அரங்கேற்றி உள்ளனர்.
 
இயலாமையை மறைப்பதற்காக, எல்லாவற்றிற்கும் அனைத்துக் கட்சிக் கூட்டம், அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டம், சட்டமன்றப் பேரவையில் தனித் தீர்மானம் என ஏதாவது ஒருவகையில் திசைத்திருப்பி மக்களை ஏமாற்றுவதுதான் தி.மு.க. தலைமையின் தொன்று தொட்ட வழக்கம். இதோ இப்போது, அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கு ஆலோசனைகளை வேறு முதலமைச்சர் கேட்டிருக்கிறார். நீட்டை ரத்து செய்யும் ரகசியம் கைவசம் இருக்கிறது என்று சொன்னவர்கள் இப்போது ஆலோசனை கேட்பது ஏமாற்று ஆலாபனை அன்றி வேறென்ன?
 
நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்பதுதான் நமது சமரசமற்ற நிலைப்பாடு. மாநிலப் பட்டியலுக்குக் கல்வி மாற்றப்படுவதே நிரந்தரத் தீர்வு. சிறப்பு ஒத்திசைவுப் பட்டியலில் கல்வியைச் சேர்க்க வேண்டும் என்பது ஒரு தற்காலிகத் தீர்வு என்றும் நாம் கூறினோம். நீட் தேர்வை ரத்து செய்வதற்காக மட்டுமன்று. நிரந்தரமாக மக்கள் பக்கம் நிற்கும் நாம், எப்போதும் இப்படித்தான் எதிலும் தீர்வை நோக்கியே யோசிப்போம்.
 
வெற்று விளம்பர மாடல் தி.மு.க அரசோ, மக்களை ஏமாற்றும் கபட நாடகக் கச்சேரிகளை மட்டுமே நிகழ்த்துகிறது. மக்கள் விழித்துக்கொண்டனர். இனி அவர்களை வஞ்சித்து ஏமாற்ற முடியாது. இதுவரை எம் மாணவச் செல்வங்களையும் பொதுமக்களையும் ஏமாற்றியதற்குத் தி.மு.க. தலைமை, மக்கள் மன்றத்தில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்.
 
தி.மு.க. தலைமை மீண்டும் மீண்டும் செய்துகொண்டே இருக்கும் தொடர் அரசியல் மோசடி மற்றும் ஏமாற்று வேலைகளுக்கு எல்லாம், 2026 சட்டமன்றத் தேர்தலில் தக்க பதிலடியை மக்கள் தரப் போகின்றனர். மக்களுடன் மக்களாக இணைந்து நின்று, அதை நிகழ்த்திக் காட்டுவதுதான் தமிழக வெற்றிக் கழகத்தின் இலக்கு, நிச்சயமாக அது 2026-இல் நிகழும், நிகழ்ந்தே தீரும்” 
 
இவ்வாறு விஜய் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மெஸ்ஸியை பிச்சைக்காரனாக மாற்றிய ஏஐ வீடியோ.. ரசிகர்கள் கண்டனம்.!