அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜூ அளித்த பேட்டி ஒன்றில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூவத்தூரில் நடிகைகளோடு உல்லாசமாக இருந்ததாக பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் சேலம் அதிமுக வட்டாரத்தில் புகைச்சல்களும், மோதல்களும் அதிகரித்துள்ளன. ஏற்கனவே சேலம் அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாசலத்திற்கும், சேலம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜூவுக்கு மோதல் நிலவி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் வெங்கடாச்சலம் சத்துணவு துறையில் வேலை வாங்கி தருவதாக, தொழில் விஷயமாக என உள்ளூர் வட்டாரத்தில் பல பேருக்கு வாக்குறுதி கொடுத்து பணம் பெற்று மோசடி செய்துள்ளதாகவும், இதை எடப்பாடி பழனிசாமி விசாரிக்க வேண்டும் எனவும் ஏ.வி.ராஜூ பொதுவெளியில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
அதை தொடர்ந்து ஏ.வி.ராஜூ மேல் அதிமுக தலைமை நடவடிக்கை எடுத்து அவரை கட்சியை விட்டு நீக்குவதாக அறிவித்தது. அதன்பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஏ.வி.ராஜூ அதிமுகவினர் குறித்து பேசியவை சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.
சசிக்கலாவுக்கு எதிராக பன்னீர்செல்வம் தர்மயுத்தம் தொடங்கியதை தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை 2017ம் ஆண்டில் பிப்ரவரி மாதம் 8ம் தேதி முதல் 18ம் தேதி வரை அதிமுக எம்.எல்.ஏக்கள் பலரும் கூவத்தூரில் நட்சத்திர விடுதி ஒன்றில் தங்க வைக்கப்பட்டனர். நட்சத்திர விடுதியில் தங்க வைத்திருந்தபோது அங்கு எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் பல சினிமா நடிகைகளுடன் உல்லாசமாக இருந்ததாகவும், அதிலும் வெங்கடாச்சலம் ஒரு இளம் நடிகையை சொல்லி அவர்தான் வேண்டுமென கேட்டதாகவும், அதற்காக ரூ.25 லட்சம் வரை அந்த நடிகைக்கு கொடுக்கப்பட்டதாகவும் அடுக்கடுக்காக பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசியுள்ளார்.
அவரது இந்த பேச்சுகளுக்கு அடிப்படை ஆதாரம் இல்லாத நிலையில் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த சர்ச்சையால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு எழுந்துள்ளது.