தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் ஜி.கே.மூப்பனார் அவர்களின் நினைவு தினத்தையொட்டி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. தலைவர்கள் ஒரே மேடையில் பங்கேற்றனர். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனம் ஈர்த்துள்ளது.
சென்னையில் உள்ள மூப்பனார் நினைவிடத்தில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு, ஈபிஎஸ் அருகே உட்கார்ந்தார்.
மேலும் மூப்பனார் நினைவு தின நிகழ்ச்சியில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களுடன் தே.மு.தி.க. பொருளாளர் எல்.கே.சுதீஷ் பங்கேற்றார்.
சமீபகாலமாக அரசியல் நிலைப்பாடுகளில் மாறுபாடுகள் காணப்பட்ட நிலையில், அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. தலைவர்கள் ஒரே மேடையில் கூடியது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதில் தேமுதிகவும் கலந்து கொண்டதால் எதிர்கால அரசியல் கூட்டணிகள் குறித்த எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது.