வெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துளது.
கோடை வெயில், கத்தரி வெயில் காரணமாக தமிழகத்தை வெயில் வாட்டை வதைத்து வந்தது. இந்நிலையில் வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் மழை வெளுத்து வாங்கியது.
இதனையடுத்து தமிழகத்தில் மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகமானது. தலைநகர் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் அனல் காற்று வீசியது. இதனால் பகல் நேரத்தில் வெளியே செல்லும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.
இந்நிலையில் வெப்ப சலனம் காரணமாக இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கடலோரப் பகுதிகளில் மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வரை காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் இந்த அறிவிப்பால் பொது மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். வெயிலுக்கு இதமாக மழை பெய்யாதா என மக்கள் ஏக்கத்தில் உள்ளனர்.