ஜார்கண்ட் மாநில முதல்வர் சமீபத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் அடுத்து கைதாகும் முதல்வர் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் என எதிர்பார்க்கப்படுவதால் எதிர்க்கட்சிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் மீது நில மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்த நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் அவரிடம் தற்போது விசாரணை நடந்துவரும் நிலையில் தனது கைதை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து உள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வர உள்ளது.
இந்த நிலையில் அடுத்ததாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மதுபான ஊழல் வழக்கில் சிக்கி சிறையில் இருக்கும் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவை அடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கும் பலமுறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகாத நிலையில் அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவரான நிதிஷ்குமார் பாஜக பக்கம் சென்று உள்ள நிலையில் மற்ற தலைவர்களை கைது செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.