அதிமுகவில் எழுந்த ஒற்றைத் தலைமை சர்ச்சை விவகாரத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருக்கு இடையில் மோதல் வெடித்த நிலையில் பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பொறுப்புகளை நீக்குவதாகவும், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி நியமிப்பது எனவும் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இதற்கு ஓபிஎஸ் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதனால் இருவரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் கட்சியில் இருந்து நீக்கினர். இது சம்மந்தமாக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில், பொதுக்குழு கூட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதன் மூலம் கட்சி முழுவதும் எடப்பாடி பழனிச்சாமி கட்டுப்பாட்டில் வந்துள்ளது.
இந்நிலையில் அதிமுகவின் புதிய பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் தேர்தல் ஆணையர்களான நத்தம் விஸ்வநாதன் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் மார்ச் 26 ஆம் தேதி தேர்தல் நடக்கும் எனவும் இன்று (சனி) முதல் வேட்புமனுத்தாக்கல் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளனர். பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட விரும்புவோ 25 ஆயிரம் ரூபாய் செலுத்தி படிவங்களை வாங்கிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.