தமிழகத்தில் ஆதிதிராவிடர் நலக்குழு என்ற ஒரு அமைப்பு உள்ளது. இதன் மூலம் வீடுகள் பராமரிப்பு, கல்வி உதவித்தொகை, வீட்டு மனை பட்டா போன்ற உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் இந்த துறைக்கு .3,000 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கப்பட்டு வரும் நிலையில், இந்த நிதி முழுமையாக செலவிடப்படுவதில்லை என்று அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்த நிலையில், ஆதி திராவிட நலத்துறைக்கு அமைச்சர், துணைத் தலைவர், அரசு செயலாளர், இயக்குநர்கள் என 34 பேர் குழுவில் இடம் பெற்றுள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த குழு செயல்படவில்லை என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
இது குறித்து மதுரையைச் சேர்ந்த ஒருவர் ஆர்டிஐ மூலம் கேள்வி கேட்ட நிலையில், அதற்குப் பதிலாக கடந்த 5 ஆண்டுகளாக ஆதிதிராவிடர் நலக்குழு செயல்படவில்லை என்றும் இதனால் ஆதி திராவிட நலத்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி மக்களைச் சென்றடைந்ததா என்பதை கண்காணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும் ஆதி திராவிடர் மக்களுக்கான பல்வேறு திட்டங்கள் முழுமையாக செல்லவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவிவரும் நிலையில், ஆடிஐ கொடுத்த இந்த பதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.