தமிழ்நாட்டில் சுமார் 30 லட்சம் பேர் சமூக நல பாதுகாப்பு திட்டங்கள் மூலமாகப் பயனடைகின்றனர் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சியில் பல மக்கள் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இன்று நடைபெற்ற தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
முதியோர் ஓய்வூதியம் ரூ.1000 ல் இருந்து ரூ1200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் ரூ.1000ல் இருந்து ரூ.1500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
கைம்பெண்களுக்கான மாதாந்திர உதவித்தொகை ரூ.1000 ல் இருந்து ரூ.1200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
மேலும், தமிழ்நாட்டில் சுமார் 30 லட்சம் பேர் சமூக நல பாதுகாப்பு திட்டங்கள் மூலமாகப் பயனடைகின்றனர். ஓய்வூதியத்திற்கு விண்ணப்பித்து, காத்திருப்பவர்களுக்கு விரைவில் ஓய்வூதிய நடவடிக்கை எடுக்கப்படும்… சமூக நலத் திட்டங்களுக்கு ரூ.845 கோடி கூடுதலாகச் செலவாகும் என்றும், வரும் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து முதியோருக்கான உதவித்தொகை உயர்த்தியது நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்துள்ளார்.