Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சின்னத்திரை படப்பிடிப்பிற்கு இப்ப என்ன அவசரம்: கஸ்தூரி கேள்வி

Advertiesment
சின்னத்திரை படப்பிடிப்பிற்கு இப்ப என்ன அவசரம்: கஸ்தூரி கேள்வி
, ஞாயிறு, 31 மே 2020 (07:22 IST)
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சின்னத்திரை படப்பிடிப்புக்கு மட்டும் தமிழக அரசு அனுமதி அளித்தது. இருப்பினும் 20 பேர்கள் மட்டுமே படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. இதனை அடுத்து சின்னத்திரை தயாரிப்பாளரின் கோரிக்கையை அடுத்து நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சின்னத்திரை படப்பிடிப்பில் 60 பேர்கள் வரை கலந்து கொள்ள அனுமதி அளித்தார். இதனை அடுத்து சின்னத்திரை படப்பிடிப்பு இன்று முதல் தொடங்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது 
 
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தமிழகத்தில் தற்போது அதிகரித்துக் கொண்டு வரும் நிலையில் சின்னத்தை படப்பிடிப்புக்கு அனுமதி தேவையா? இவ்வளவு தளர்வுகள் தேவையா? என்று நடிகை கஸ்தூரி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் தனது முகநூலில் கூறியிருப்பதாவது:
 
சின்ன திரை படப்பிடிப்புகளுக்கு 60 பேர் வரை பணியாற்றலாம் என்று இன்று தமிழக முதல்வர் அனுமதி வழங்கியுள்ளார். பெரிய தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் சின்ன திரையை நம்பியிருக்கும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளிகளுக்கும்  இது இனிப்பான செய்தியாக இருந்தாலும் இதில் உள்ள ஆபத்தை உணர்ந்து கலைத்துறையினர் மிக கவனமாக நிதானமாக செயல்படுவது அவசியம். 
 
எங்கோ யாருக்கோ என்ற நிலைமை போய் இதோ இன்று எங்கள் தெருவில் கொரோனா தொற்றி விட்டது.  பால் விநியோகிப்பவர் பணிப்பெண் இப்படி பல உருவமெடுத்து எங்கள் குடியிருப்பின் வாசல் கதவை தட்டி கொண்டிருக்கிறது. இது எனக்கு மட்டுமில்லை, எல்லாருக்கும் இதே நிலைதான்.
 
தமிழகத்தில் கொரோனா மிக வேகமாக பரவும் நிலையில், அத்தியாவசிய சேவைகளை கூட மிக கவனமாக கொஞ்சம் கொஞ்சமாக செயல்படுத்திக்கொண்டிருக்கும் வேளையில், மணந்தால் 50 பேர் மட்டும், இறந்தால் 20 பேர் மட்டும் என்ற கடுமையான கட்டுப்பாடு உள்ள நேரத்தில், பொழுதுபோக்கு சமாச்சாரத்திற்கு இவ்வளவு சீக்கிரம் இவ்வளவு தளர்வு எதற்கு, எதன் அடிப்படையில் என்று மக்கள் கண்டிப்பாக கேட்பார்கள்.
 
நான் இப்பொழுது ஒரு தெலுங்கு தொலைக்காட்சி தொடரில் பணியாற்றி வருகிறேன். சொந்த அனுபவத்தில் சொல்கிறேன், ஷூட்டிங் ஸ்பாட்டில் கொரோனாவை தடுப்பது, சமூக இடைவெளி பாதுகாப்பு இதெல்லாம் மிக பெரிய சவால்கள். 60 பேர் தினமும் கூடினால் கண்டிப்பாக தொற்று அபாயம் உண்டு. ஏற்கனவே கலைஞர்களை பூதக்கண்ணாடி வைத்து விமர்சிக்கிறார்கள். சினிமாவால் டிவியால் சமூகம் பாழாகுது என்ற குற்றசாட்டு ஏற்கனவே உள்ளது. இதில் ஷூட்டிங் செய்து கொரோனா வந்துவிட்டால் வேறு வினையே வேண்டாம். அப்புறம் மொத்தமாக மூடிவிட்டால் என்ன செய்வது?
 
தமிழகத்தில் கொரோனாவின் வீரியம் எப்பொழுது குறையும் என்று யாருக்கும் தெரியாது. இன்னும்  ஒன்றிரண்டு மாதம் படப்பிடிப்புகளை தவிர்ப்பதே உசிதம், ஆனால் எல்லோருக்கும் அதற்கு பொருளாதாரம் இடம் கொடுக்காது. வயிற்றுப்பாட்டை பார்க்கவேண்டுமே! அதனால் எச்சரிக்கை எச்சரிக்கை கவனம் கவனம். மிகுந்த எச்சரிக்கை தொலைநோக்கு பார்வை, பொறுமை அவசியம்.
 
இவ்வாறு நடிகை கஸ்தூரி தனது முகநூலில் தெரிவித்துள்ளார். கஸ்தூரியின் இந்த முகநூல் பதிவு சின்னத்திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொதுஇடங்களில் எச்சில் துப்பினால்...புகைப்பிடித்தால் சிறை !