தி.மு.க. எம்.பி. கனிமொழி, "சில நடிகர்கள் திரைப்படங்களில் போலீஸ் வன்முறை காட்சிகளை கொண்டாடிவிட்டு, நிஜத்தில் போலீஸ் வன்முறையை எதிர்ப்பதாக பாசாங்கு செய்கிறார்கள்" என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு மறைமுகமாக கேள்வி எழுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அஜித்குமார் மரணம் குறித்து கேள்வி எழுப்பிய விஜய், "சாரி மாடல் அரசு" என்று தி.மு.க. அரசை கிண்டல் செய்த நிலையில், அவருக்கு தி.மு.க. பிரமுகர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி சமீபத்தில் அளித்த பேட்டியில், விஜய்யின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல், "சில நடிகர்கள் இரட்டை வேடம் போடுவதாகவும், நடிகர்களின் திரைப்படங்களில் காவல்துறை வன்முறையையும், லாக்கப் மரணங்களையும் கொண்டாடிவிட்டு, இப்போது அரசியலுக்கு வந்ததும் குறிப்பிட்ட சில சம்பவங்களுக்கு மட்டும் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும்" தெரிவித்தார்.
"அரசியலுக்கு நுழைந்த பிறகு மக்களிடம் பாசம் செய்வது போல பாசாங்கு செய்வது வேடிக்கையாக உள்ளது" என்றும் அவர் விஜய்யை மறைமுகமாக தெரிவித்தார். இருப்பினும், அவர் விஜய் பெயரை நேரடியாக சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கனிமொழியின் இந்த பேச்சுக்கு விஜயின் தரப்பில் இருந்தோ அல்லது தமிழக வெற்றி கழகத்தின் தரப்பிலிருந்து என்ன பதில் வரும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.