லாட்டரி அதிபர் மார்ட்டின் மருமகன் ஆதவ் அர்ஜூன் என்பவருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில் இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார் அந்த விளக்க அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சமூக இயக்கம்" "அரசியல் இயக்கமாகப்" பரிணாமம் பெறுகிற முற்போக்கான மாற்றங்கள் நிகழ்கிற போது, எதிரும் புதிருமான உரையாடல்கள் வெடித்தெழுவது தவிர்க்க இயலாதவையாகும்.
அப்படித் தான் தற்போது, ஆதவ் அர்ஜூன் அவர்கள் நமது கட்சியின் துணை பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டதையடுத்து, நமது வளர்ச்சியை விரும்பாத கொள்கைப் பகை முனையத்திலிருந்து, விமர்சனங்கள் என்னும் பெயரில் ஒரு பொருட்டுமில்லாத உளறல்கள் சமூக ஊடகங்களை நிரப்பும் குப்பைக் கூளங்களாக வந்து குவிகின்றன. அவற்றுக்கு முகம் கொடுக்காமல் நமது கடமைகளை நோக்கி நாம் கடந்துபோவதே சாலச்சிறந்தது. எனினும், என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகளுக்கு - குறிப்பாக, புதிதாக கட்சியில் இணைந்து இயங்கும் இளந்தலைமுறையினருக்கு சில தகவல்களை நமது இயக்கத்தின் வரலாற்று நிலைப்பாடுகளைச் சுட்டிக்காட்டுவது எனது பொறுப்பாகும். காழ்ப்பைக் கக்குவோருக்காக அல்ல; கடமைகளை ஆற்றுவோருக்காக- நான் சிலவற்றைப் பகிர்ந்துகொள்ள விழைகிறேன். 2007 ஆம் ஆண்டு அக்டோபர் 02 அன்று நமது கட்சியின் மையக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் விளச்சல்கள் தாம் இன்றைக்கு நமது கட்சி எட்டியுள்ள புரட்சிகரமான மாற்றங்களாகும்.
2008 இல் பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகிய தலைமை பொறுப்புகளிலேயே தலித் அல்லாத தோழர்களை நமது கட்சி முழுமையான புரிதலோடு உள்வாங்கியிருக்கிறது. அத்துடன், துணை பொதுச் செயலாளர்கள், அமைப்புச் செயலாளர்கள், மாநிலச் செயலாளர்கள், மண்டலச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் -என பல்வேறு அடுக்குகளில் ஏராளமான தலித் அல்லாத சனநாயக சக்திகளை நமது கட்சி உள் வாங்கியிருக்கிறது.
எந்தவொரு கட்சியிலும் இல்லாத வகையில், முதன்முதலாக கட்சியின் நிர்வாக அதிகாரங்களில் குறிப்பாக மாவட்டச் செயலாளர் நியமனங்களில் தலித் அல்லாதோரை 10% அளவில் " கட்டாய அதிகாரப் பகிர்வு " என உள்வாங்கியிருக்கிறோம். மேலும், இளந்தலைமுறையினருக்கு 25 விழுக்காடு, பெண்களுக்கு 10 விழுக்காடு என மாவட்டச் செயலாளர்கள் நியமனத்தில் 'கட்டாய அதிகாரப் பகிர்வை' நடைமுறைப் படுத்தியிருக்கிறோம்.
சமூகநீதி கண்ணோட்டத்தில் நாம் செய்துவரும் இத்தகைய நியமனங்களை, நம்மை விமர்சிப்பவர்கள் யாரும் வரவேற்றுப் பாராட்டவில்லை. அது நமக்குத் தேவையுமில்லை. எனினும், விமர்சிப்பவர்கள் எத்தகைய உள்நோக்கத்தோடு இவ்வாறு பரப்புகிறார்கள் என்பதை என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகள் உணர்ந்துகொள்ள வேண்டும். கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் இதுநாள் வரை (2023), 15 ஆண்டுகளாக நாம் மேற்கொண்டு வரும் இத்தகைய நடவடிக்கைகள், நமது கட்சியின் அகநிலையில் பண்புமாற்றத்தினை ஏற்படுத்தும் நன்முயற்சிகளே ஆகும்.
இவை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை ஒரு முழுமையான அரசியல் சக்தியாக பரிணாமம் பெறச் செய்வதற்கான அளப்பரிய செயல்திட்டமே என்பதை நாம் புரிந்துகொண்டு அடுத்தப் பாய்ச்சலுக்கு அணியமாவோம். அகநிலையின் பண்புமாற்றங்களே புறநிலையின் வடிவ மாற்றங்களாகும். அதனடிப்படையில், அவதூறுகளைக் கடந்து அமைப்பாய்த் திரள்வோம்! அமைப்பை வலுவாக்கும் கடமைகள் ஆற்றுவோம்!
இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.