Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆதார் - மின் இணைப்பு எண்கள் இணைப்பது ஏன்: ஓ பன்னீர்செல்வம் கேள்வி

OPS
, சனி, 26 நவம்பர் 2022 (17:11 IST)
ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு இணைப்பதற்கான அவசியம் ஏன் என மக்களுக்கு சொல்லாமலேயே பொதுமக்களை திமுக அரசு துன்புறுத்தி வருவது கண்டனத்துக்குரியது என முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
எரிவாயு உருளை இணைப்பு ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட வேண்டும் என்று 2016 ஆம் ஆண்டு மத்திய அரசு உத்தரவிட்டபோது அதற்கு கண்டனம் தெரிவித்த அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டின் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தவுடன் மின்சார இணைப்பு ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட வேண்டும் என்று கூறியிருப்பது "ஊருக்குதான் உபதேசம்" என்ற பழமொழியைத்தான் நினைவுபடுத்துகிறது. 
 
சொத்து வரி, குடிநீர் வரி, மின் கட்டண வரி, பால்விலை உயர்வு என பல இன்னல்களுக்கு தி.மு.க. அரசால் ஆளாக்கப்பட்டு மக்கள் தவித்துக் கொண்டிருக்கின்ற நிலையில், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கூறியதோடு, திடீரென்று ஆதார் எண்ணை இணைத்தால்` மட்டுமே கட்டணத்தை செலுத்த முடியும் என்ற வகையில் இணையதளம் மற்றும் அலுவலகங்களில் மென்பொருள் மாற்றத்தை தி.மு.க. அரசு ஏற்படுத்தியது. இதன் காரணமாக, பெரும்பாலான மின் நுகர்வோர்கள் அபராதத்துடன் மின் கட்டணம் செலுத்த வேண்டிய பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டனர்.
 
இது குறித்து மக்கள் மத்தியில் குழப்பமான சூழ்நிலை நிலவியதை அடுத்து, மின் கட்டண மையங்களில் கட்டணம் செலுத்த ஆதார் எண் இணைக்க வேண்டும் என்ற அறிவிப்பை மட்டும் தமிழ்நாடு மின்சார வாரியம் திரும்பப் பெற்று இருப்பதாக செய்திகள் வந்துள்ளன. இது ஓர் அரைகுறை நடவடிக்கை. தமிழ்நாட்டில் பெரும்பாலான மின் நுகர்வோர்கள் இணையதளம் மூலம் மின்சார கட்டணத்தை செலுத்துகின்ற இந்தக் காலகட்டத்தில், இணையதளத்தின்மூலம் மின் கட்டணம் செலுத்துபவர்களுக்கு எந்த ஒரு நிவாரணமும் அளிக்காதது மின் நுகர்வோர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க. அரசின் இந்த மக்கள் விரோத நடவடிக்கைக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். 
 
எரிவாயு உருளை மானியம் பெற வேண்டுமென்றால், எரிவாயு உருளை இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறியபோது, போதுமான கால அவகாசத்தை அளித்தது. அப்போது, உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை மேற்கோள்காட்டி மத்திய அரசை விமர்சனம் செய்தவர் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், தற்போதைய முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின். மத்திய அரசின் இந்த ஆதார் இணைப்பு நடவடிக்கை மானியம் பெறும் நுகர்வோர்களின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கையாகும் என்றும் விமர்சித்தார்.
 
ஆனால், தற்போது அதே வேலையை தி.மு.க. அரசு மேற்கொண்டு இருக்கிறது. அதாவது, மின் இணைப்பினை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று தி.மு.க. அரசு உத்தரவிட்டு இருக்கிறது. தி.மு.க. அரசின் இரட்டை வேடத்திற்கு இது மற்றுமொரு எடுத்துக்காட்டு. இதில் மற்றொரு கொடுமை என்னவென்றால், இதற்கான பணி துவங்கி பத்து நாட்கள் முடிவடைவதற்குள் ஆதார் எண்ணை சேர்த்தால்தான் மின் கட்டணத்தை செலுத்த முடியும் என்று கூறியிருப்பதுதான். தி.மு.க. அரசின் இந்த நடவடிக்கை முற்றிலும் நியாயமற்ற செயல்.
 
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இந்த நடவடிக்கை, மின்சார மானியம் பெறும் பயனாளிகளின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கையாகும் என்றே அனைத்துத் தரப்பினரும் கருதுகின்றனர். கடந்த ஒன்றரை ஆண்டு கால தி.மு.க. அரசின் "சொல்வது ஒன்று செய்வது ஒன்று" என்ற 'திராவிட மாடல்' கோட்பாடு இதைத்தான் உணர்த்துகிறது. தி.மு.க. அரசின் இந்த நடவடிக்கை மின் நுகர்வோர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
தமிழ்நாட்டில் சில வீடுகள் இறந்தவர்களின் பெயர்களில் உள்ளதால், இறந்தவர்களுக்கு ஆதார் எண் இல்லாத சூழ்நிலையில், அவர்களுடைய வாரிசுதாரர்களுக்குள் ஆதார் எண்ணை இணைப்பதில் சிக்கலான சூழ்நிலை நிலவுகிறது. இது ஒரு புறம் என்றால், வாடகைக்கு விடப்பட்டுள்ள வீடுகளில் வேறு மாதிரியான சிக்கல் நிலவுகிறது. சில வீட்டின் உரிமையாளர்கள் வாடகைதாரர்களின் ஆதார் எண்ணை இணைக்க அனுமதிப்பதில்லை. சில வாடகைதார்கள் தங்கள் ஆதார் எண்ணை இணைக்க விரும்பவில்லை. 
 
மொத்தத்தில், தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை செலுத்துவதில் ஒரு குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது. மின் இணைப்பினை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான காரணத்தை தமிழ்நாடு மின்சார வாரியம் இதுவரை தெரிவிக்காதது மக்களிடையே பெருத்த சந்தேகத்தினை எழுப்பியுள்ளது. ஒருவேளை, ஆதார் எண்ணுடனான மின் இணைப்பு பணி முடிந்தவுடன், ஒருவருக்கு ஒரு வீட்டிற்கு மட்டும்தான் மின்சார மானியம் வழங்கப்படும் என்று தி.மு.க. அரசு அறிவிக்குமோ என்ற அச்சமும் தமிழக மக்கள் மத்தியில் நிலவுகிறது. ஒருவேளை இதுபோன்றதொரு முடிவு எடுக்கப்பட்டால், அந்த முடிவு வாடகைக்கு குடியிருக்கும் ஏழை, எளிய மக்களைத் தான் கடுமையாக பாதிக்கும். 
 
எந்தவித காரணத்தையும் தெரிவிக்காமல், மின் இணைப்பினை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று கூறுவதில் ஏதோ உள்நோக்கம் இருக்கிறது என்றே மக்கள் கருதுகிறார்கள். இதனைத் தெளிவுபடுத்த வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழ்நாடு அரசாங்கத்திற்கு உண்டு. எனவே, முதலமைச்சர் இதில் தனிக் கவனம் செலுத்தி, ஆதார் எண் இணைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைக்கவும், ஆதார் எண் இணைப்பு காரணமாக மின்சார மானியம் பெற எவ்வித நிபந்தனைகளும் வருங்காலத்தில் விதிக்கப்படாது என்கிற உத்தரவாதத்தினை அளிக்கவும், ஆதார் எண் இணைப்பிற்கான கால அவகாசத்தை ஆறு மாதத்திற்கு நீட்டிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெண்களுக்கு இலவச பேருந்து பயணம்: பாஜக கொடுத்த வாக்குறுதி