வரும் டிசம்பர் 21ஆம் தேதி சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இதனையடுத்து தினகரன் மற்றும் தீபா ஆகியோர் இந்த இடைத்தேர்தலில் போட்டியிட போவது உறுதி என்று தெரிவித்துவிட்டனர். அதேபோல் அரசியல் கட்சிகளில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை அறிவித்துவிட்டது.
இந்த நிலையில் பாஜக ஒரு பிரபலத்தை இந்த தேர்தல் களமிறக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் கூறியபோது, '“எந்த விதத்தில் இந்தத் தேர்தலைச் சந்திக்க வேண்டுமோ அந்த விதத்தில் சந்திப்போம். ஏனென்றால், எங்கள் கட்சிக்கு என்று விதிமுறைகள் இருக்கிறது. வழிமுறைகள் இருக்கிறது. நாளையோ நாளை மறுநாளோ எங்கள் தேர்தல் பணிக்குழு கூட்டப்படும். அதில் முக்கியமான தலைவர்கள் அனைவரும் கலந்துகொண்டு கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பிறகு எப்படி இந்தத் தேர்தலைச் சந்திப்பது என்பதைப் பற்றி நாங்கள் தெளிவாக முடிவெடுத்து அறிவிப்போம். பிரபலமான ஒரு நபர் பா.ஜ.க சார்பில் வேட்பாளராக நிறுத்தப்படுவார்” என்று கூறியுள்ளார்.
தமிழிசை செளந்திரராஜன் குறிப்பிட்ட அந்த பிரபலம் திரையுலகை சார்ந்தவரா? அல்லது அரசியல்வாதியா? என்ற ஊகங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி கொண்டிருக்கின்றது.