இந்த முறை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அனைத்து கட்சிகளும் காசை வாரி இறைக்கும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கிண்டலடித்துள்ளார்.
வருகிற டிசம்பர் மாதம் 21ம் தேதி ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. எனவே, அரசியல் கட்சிகள் சுறுசுறுப்படைந்துள்ளன. அனைத்து கட்சிகளிலும் தங்கள் சார்பில் யாரை நிறுத்துவது என்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.
இந்த தேர்தலில் தான் போட்டியிடுவதாக ஏற்கனவே தினகரன் ஏற்கனவே அறிவித்துவிட்டார். மற்ற கட்சிகளும் விரைவில் அறிவிக்கவுள்ளன.
இந்நிலையில் இடைத்தேர்தல் அறிவிப்பு பற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் “ நேற்று இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு. இன்று ஆர்.கே நகர் தேர்தல் அறிவிப்பு. ஏற்கனவே நான் கூறியது தான். நல்ல நாடகம் இங்கே நடக்குது.
ஆர்.கே.நகர் தேர்தலில் கடந்த முறை தினகரனும், திமுகவும் மட்டுமே பண வினியோகம். இம்முறை பினாமி அணியும் வாரி இறைக்கும். காவல்துறை அடக்கி வாசிக்கும். ஆர்கே நகர் மக்களுக்கு கொண்டாட்டம்.
இந்த முறை விஜயபாஸ்கர் வகையறாக்கள் பணத்தை துணிச்சலாக வாரி இறைக்கலாம். வருமானவரித்துறை அதிகாரிகள் நிச்சயம் சோதனை நடத்த மாட்டார்கள்” என கிண்டலாக குறிப்பிட்டுள்ளார்.