சேலத்தில் மணப்பெண் ஒருவர் தனது திருமணத்தன்று குழந்தை பெற்றெடுத்ததால் மணமகன் வீட்டாரும் திருமணத்திற்கு வந்தவர்களும் பேரதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
சேலம் மாவட்டம் கொளத்தூரை அடுத்த சத்யாநகர் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணிற்கும் ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களது திருமணம் நடைபெற்றது.
திருமணமான சிறிது நேரத்தில் மணமகள் வயிற்று வலியால் துடித்தார். அலறிப்போன விசேஷ வீட்டார், அந்த பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மருத்துவமனையின் வளாகத்தில் காத்துக்கொண்டிருந்த மணமகனுக்கும், அவரது வீட்டாருக்கும் பேரதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது. மணப்பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள், அந்த பெண்மணி கர்ப்பமாக இருப்பதாகவும், சற்று நேரத்தில் அவருக்கு குழந்தை பிறந்துவிடும் என்று தெரிவித்தார்கள்.
இதனைக்கேட்ட மணமகனும் அவரது வீட்டாரும் இடிந்து போய் உட்கார்ந்தனர். பின் அவர்கள் மணமகள் வீட்டாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து இரு வீட்டாரையும் அழைத்து பேசினார்கள். மேலும் இது சம்மந்தமாக விசாரணையும் நடைபெற்று வருகிறது.
திருமணமான அன்றே புதுப்பெண்ணுக்கு குழந்தை பிறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.