Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அண்ணாதுரையின் கொள்கைகளை அவரைத் தலைவர் என்று சொல்லும் கட்சிகள் பின்பற்றுகின்றனவா? அண்ணாமலை

Advertiesment
Annamalai

Sinoj

, சனி, 3 பிப்ரவரி 2024 (21:35 IST)
தமிழக முன்னாள் முதலமைச்சரும் திமுகவின் நிறுவனத் தலைவருமான அண்ணாதுரை அவர்களது நினைவுதினமான இன்று, அவரின் கொள்கைகளை அவரைத் தலைவர் என்று சொல்லும் கட்சிகள் பின்பற்றுகின்றனவா என்பதை சிந்திக்க வேண்டும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளதாவது:

''இன்றைய மாலை என் மண் என் மக்கள் பயணம், சூரிய பகவான் வழிபட்ட அகத்தீஸ்வரர் கோவில், மற்றும் புகழ்பெற்ற காங்கேயநல்லூர் முருகன் கோவில் அமைந்திருக்கும் அற்புதமான சட்டமன்ற தொகுதியான வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்றத் தொகுதியில், பொதுமக்கள் பேராதரவுடன் வெகுசிறப்பாக நடந்தேறியது. கடந்த ஆண்டு மே மாதம், 365 கோடி மதிப்பிலான காட்பாடி ரயில் சந்திப்பு மறுசீரமைப்பு திட்டத்தை நமது பிரதமர் திரு மோடி அவர்கள் அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார். சுமார் 30,000 சதுர மீட்டர் பரப்பளவில் இந்த ரயில்வே நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் முடித்தபின்பும் இந்த ரயில் நிலையம் காட்பாடி ரயில் நிலையம் என்றே அழைக்கப்படும். திமுகவினரைப் போல, மக்கள் வரிப்பணத்தில் கட்டப்படுவதற்கு கலைஞர் கருணாநிதி பெயர் வைக்கப்படாது. 
 
தமிழக முன்னாள் முதலமைச்சரும் திமுகவின் நிறுவனத் தலைவருமான அண்ணாதுரை அவர்களது நினைவுதினமான இன்று, அவரின் கொள்கைகளை அவரைத் தலைவர் என்று சொல்லும் கட்சிகள் பின்பற்றுகின்றனவா என்பதை சிந்திக்க வேண்டும். மதுவால் வரும் வருமானம் வேண்டாம் என்று, தீவிர மதுவிலக்கைப் பின்பற்றியவர். குடும்ப அரசியலை வெறுத்தவர். தனக்கு பின் தனது குடும்பத்தில் யாரும் அரசியலுக்கு வராமல் பார்த்துக் கொண்டவர். ஊழல் செய்யாதவர். அவரது வளர்ப்பு மகன், அரசு மருத்துவராக ஓய்வு பெற்று எளிய வாழ்க்கை வாழ்ந்தவர். ஆனால், அண்ணா அவர்களது பெயர் சொல்லும் கட்சிகளின் தலைவர்களோ, தங்களுக்குப் பிறகு தங்கள் வாரிசு என குடும்ப அரசியலை மட்டுமே முன்னிறுத்திச் செயல்படுகிறார்கள். இன்று மது ஆலைகளை நடத்துபவர்களே திமுகவினர்தான். 
 
புகழ்பெற்ற முருகபக்தரும், ஆன்மீகவியலாளருமான திருமுருக கிருபானந்த வாரியார், காட்பாடி தொகுதிக்கு உட்பட்ட காங்கேயநல்லூரில் பிறந்தவர். எட்டு வயதிலேயே தேவாரம், திருப்புகழ், திருவருட்பா, கந்தபுராணம், கம்பராமாயணம், வில்லிபாரதம் முதலான பத்தாயிரம் பாடல்களுக்கு மேல் கற்றுத் தேர்ந்தவர். சனாதன தர்மம் தமிழகத்தில் செழிக்கிறது என்றால் அதற்கு திருமுருக கிருபானந்த வாரியாரும் ஒரு காரணம். ஆனால் அந்த பெருமைமிகு மகானை, அண்ணாதுரை அவர்கள் மறைவுக்குப் பிறகு, அவரைத் தவறாகப் பேசிவிட்டார் என்று திமுகவினர், வாரியார் வீட்டை தாக்கியதோடு மட்டுமல்லாமல் அவர் வழிபடும் சாமி விக்கிரகங்களை உடைத்தனர். திமுக எப்போதுமே இந்து மத விரோதமாகத் தான் செயல்பட்டு வந்திருக்கிறது. 
 
கடந்த 2019 ஆம் ஆண்டு, வேலூர் பாராளுமன்றத் தேர்தல் தேதி மட்டும், பணப்பட்டுவாடா காரணமாக மாற்றி வைக்கப்பட்டது. அமைச்சர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் வீட்டில் பல கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது இது தொடர்பான வழக்கில், திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர் பெயர் டி.துரைமுருகன் ஆனால், திமுக வேட்பாளராக இருந்த கதிர் ஆனந்த்தின் தந்தை பெயர் துரைமுருகன், அதனால் இருவரும் வேறு வேறு என்று வாதிட்டார். பெயரின் முதல் எழுத்தை வைத்து மாறுவேடம் போட்டு மக்களை ஏமாற்ற முயற்சி செய்துள்ளார் அமைச்சர் துரைமுருகன்.  திமுக ஆட்சிக்கு வந்து ஒரே ஆண்டில் மணல் கொள்ளை மூலமாக அரசுக்கு ஏற்பட்ட இழப்பு 4,730 கோடி ரூபாய். இந்த மணல் கொள்ளையடித்தவர்களின் 136 கோடி ரூபாய் சொத்தை அமலாக்கத்துறை நேற்று முடக்கியுள்ளது. விரைவில் கதிர் ஆனந்த் மற்றும் துரைமுருகன் வீட்டுக்கும் அமலாக்கத் துறை வரும்
 
கல்லூரி மாணவியருக்கு மாதம் 1,000 ரூபாய் உதவித் தொகை தரும் விழாவில், பெண்களைப் பற்றிக் கொச்சையாகப் பேசினார் அமைச்சர் துரைமுருகன். இவர்கள் பெண்களுக்கு கொடுக்கும் மதிப்பு இதுதான். கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெறும் 746 வாக்குகள் வித்தியாசத்தில் தான் இவர் வென்றார். அடுத்த முறை தேர்தலில் டெபாசிட் கூடக் கிடைக்காது. அமைச்சர் துரைமுருகனால் அவரது தொகுதிக்கும் எந்த பயன் இல்லை தமிழகத்தின் எந்தப் பகுதிக்கும் பயன் இல்லை. தமிழகத்தின் நீர்வளத்துறை அமைச்சரான இவர், மேகதாது விவகாரத்திலோ, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தும் விவகாரத்திலோ தீர்வு கண்டாரா? பேபி அணையை பழுது பார்க்கச் செல்கிறோம் என்று மக்களை ஏமாற்றினார்.
 
கொங்கு பகுதியில் விவசாயத்தை மேம்படுத்த, 65 ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை வைத்த அத்திக்கடவு அவிநாசி திட்டம் கடந்த ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்டது. கடந்த 9 ஆண்டுகளில், நமது மத்திய அரசு, தமிழகத்தில் நீர்ப்பாசன மேம்பாட்டுக்காக வழங்கிய நிதி, 2,962 கோடி ரூபாய். கடந்த ஆட்சியின் நிறைவிலேயே, 98% அத்திக்கடவு திட்டத்தின் பணிகள் நிறைவடைந்த தாகத் தெரிவித்தனர். மீதமுள்ள 2% பணிகளை, மூன்று ஆண்டுகளாக திமுகவினர் நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். மூன்று ஆண்டுகளாக, பொதுப்பணித் துறை அதிகாரிகள், அமைச்சர்கள்  பழனிவேல் தியாகராஜன், துரைமுருகன், முத்துச்சாமி தொடங்கி, முதலமைச்சர் ஸ்டாலின், 2G ராஜா வரை அனைத்து திமுகவினருமே, இதோ அதோ என்று இழுத்துக்கொண்டே தான் இருக்கிறார்களே தவிர, அவிநாசி திட்டம் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. எங்கே சென்றது ஒதுக்கீடு செய்த நிதி?
 
வரும் பாராளுமன்றத் தேர்தல், மக்கள் நலன் சார்ந்த, இளைஞர்களுக்கான, விவசாயிகள் மற்றும் மகளிருக்கான, நமது குழந்தைகளின் எதிர்காலத்துக்கான தேர்தல். கடந்த பத்து ஆண்டுகளாக, நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு  நரேந்திரமோடி அவர்களின் நல்லாட்சி தொடரவும், ஊழல், குடும்ப அரசியலை ஒழிக்கவும், தமிழகம் இம்முறை துணை நிற்க வேண்டும். தமிழகம் முழுவதும், பாஜக கூட்டணி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.
தமிழக முன்னாள் முதலமைச்சரும் திமுகவின் நிறுவனத் தலைவருமான அண்ணாதுரை அவர்களது நினைவுதினமான இன்று, அவரின் கொள்கைகளை அவரைத் தலைவர் என்று சொல்லும் கட்சிகள் பின்பற்றுகின்றனவா என்பதை சிந்திக்க வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனியாக ஒரு கோவிலைக் கட்டி, சாதிய ஆதிக்கத்தை நிலைநாட்ட முற்படுவதா? சீமான் கேள்வி