நேற்று நெல்லை எக்ஸ்பிரஸ் மூலமாக திருநெல்வேலிக்கு பணப்பட்டுவாடா செய்ய ரூ.4 கோடி கடத்திய பாஜக நிர்வாகி மற்றும் கூட்டாளிகள் பிடிபட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் நகை, பணம், பரிசுப்பொருட்களை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில் எக்மோரில் இருந்து திருநெல்வேலி செல்லும் நெல்லை எக்ஸ்பிரசில் அரசியல் கட்சியை சேர்ந்த சிலர் பணப்பட்டுவாடா செய்ய பணம் எடுத்து செல்வதாக தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதையடுத்து நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி பயணிகள் பைகளை சோதித்தபோது, அதில் மூன்று பேர் அவர்கள் பையில் கட்டுக்கட்டாக ஏராளமான பணத்தை வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். உடனடியாக பணத்தை பறிமுதல் செய்ததுடன், அவர்களையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விசாரணையில் பணத்துடன் பிடிப்பட்டவர்கள் புரசைவாக்கத்தில் விடுதி நடத்தி வரும் பாஜக உறுப்பினர் சதீஷ் அவரின் சகோதரர் நவின் மற்றும் லாரி ஓட்டுனர் பெருமாள் என தெரிய வந்தது. திருநெல்வேலியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்காக பணப்பட்டுவாடா செய்ய இந்த பணத்தை கொண்டு சென்றதாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.