உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 30 தமிழர்கள் சிக்கிக் கொண்டதாக செய்திகள் வெளியான நிலையில் தமிழக அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக 10 தமிழர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டதாகவும் இன்று மாலைக்குள் மீதம் உள்ளவர்கள் மீட்கப்படுவார்கள் என்றும் உத்தரகாண்ட் அரசு பதில் அளித்து இருந்தது. இந்த நிலையில் தற்போது 30 தமிழர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு விட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
உத்தரகாண்ட் மாநிலத்திற்கு சிதம்பரத்திலிருந்து செப்டம்பர் ஒன்றாம் தேதி 30 தமிழர்கள் ஆன்மீக சுற்றுலா சென்ற நிலையில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக அவர்கள் சென்ற வாகனம் சிக்கிக்கொண்டது. மேலும் வேனில் பெட்ரோல் இல்லாததால் நடுவழியில் நின்று விட்ட நிலையில் அவர்களை மீட்க தமிழக அரசு அதிரடியாக நடவடிக்கை எடுத்தது.
இதனை அடுத்து தற்போது 30 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டு பாதுகாப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களை தமிழகத்திற்கு அழைத்து வர அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. 30 பேரும் நாளை காலை அநேகமாக விமானம் மூலம் சென்னை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவிக்க தெரிவித்துள்ளது.
முன்னதாக அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் உத்தரகாண்ட் மாநில அதிகாரிகளை தொடர்பு கொண்டு ராணுவத்தின் மூலம் தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.