Publish Date: Mon, 23 Mar 2026 (15:46 IST)
Updated Date: Mon, 23 Mar 2026 (15:48 IST)
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் டஹ்ற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வதில் அனைத்துப் கட்சிகளும் தீவிரம் காட்டி வரும் நிலையில், அதிமுக தனது கூட்டணிக் கட்சியான பாரதிய ஜனதா கட்சிக்கு 27 தொகுதிகள் ஒதுக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில வாரங்களாகவே அதிமுக மற்றும் பா.ஜ.க உயர்மட்டத் தலைவர்கள் இடையே தொகுதிப் பங்கீடு குறித்த பலகட்டப் பேச்சுவார்த்தைகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வந்தன. தேசியக் கட்சியான பா.ஜ.க ஆரம்பத்தில் அதிக எண்ணிக்கையிலான சுமார் 35 முதல் 40 வரை தொகுதிகளைக் கோரியதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டன. இருப்பினும், அதிமுகவின் வாக்கு வங்கி, கள நிலவரம் மற்றும் வெற்றி வாய்ப்புகளைத் துல்லியமாகச் சுட்டிக்காட்டி எடப்பாடி பழனிசாமி தரப்பு மிகவும் சாதுரியமாகக் காய்களை நகர்த்தியது. பலகட்ட இழுபறிகளுக்குப் பிறகு, இறுதியில் இரு தரப்புக்கும் லாபகரமான முறையில் 27 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது அதிமுக கூட்டணியில் ஒரு மிக முக்கியமான அரசியல் நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
ஆளும் கட்சியான திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை இலக்குடன், ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகளைச் சிதறவிடாமல் ஒருங்கிணைக்கும் முயற்சியில் எடப்பாடி பழனிசாமி தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். பா.ஜ.க-வுடனான இந்தத் தொகுதி உடன்பாடு, கூட்டணியைத் தமிழகத்தில் மேலும் பலப்படுத்தியுள்ளது. குறிப்பாக, கொங்கு மண்டலம் மற்றும் தென் மாவட்டங்களில் இந்த இரு கட்சிகளின் கூட்டணி கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.