சென்னை அம்பத்தூரில் உள்ள பிரதான சாலையில் 21 அடி ஆழத்திற்கு திடீரென ராட்சத பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
சென்னை அம்பத்தூர் மேனாம்பேடு- கருக்கு பிரதான சாலையில் நான்கு மூலை சந்திப்பில் மையத்தின் சாலை திடீரென உள்வாங்கியது. சுமார் 21 அடி ஆழத்தில் 8 அடி அகலத்திற்கு சாலையில் ராட்சத பள்ளம் ஏற்பட்டது. அதிகாலையில் ஏற்பட்ட இந்த பள்ளத்தால் எந்த ஒரு விபத்தும் ஏற்படவில்லை. இதனை அவ்வழியே வந்த ரோந்து காவலர்கள் கண்டவுடன் உடனடியாக தடுப்புகள் அமைத்து பொதுமக்கள் யாரும் உள்ளே வராதவாறு நடவடிக்கை மேற்கொண்டனர்.
மேலும் இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல், அம்பத்தூர் மண்டல குழு தலைவர் பி கே மூர்த்தி உள்ளிட்ட மாநகராட்சி மற்றும் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் ராட்சத பள்ளம் குறித்து ஆய்வு செய்து சீர் செய்யும் பணியை துவக்கினர்.. ஜேசிபி எந்திரம் கொண்டு உள்வாங்கிய சாலையை முழுவதுமாக அகற்றி பள்ளத்தை அகலப்படுத்தி சாலையை சீர் செய்தனர்.
இதனால் கருக்கு மேனாம்பேடு பிரதான சாலை தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளது. தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சாலை வழியே அம்பத்தூர், பட்டரவாக்கம், கொரட்டூர், அம்பத்தூர் தொழிற்பேட்டை போன்ற பகுதிகளை இணைக்கக்கூடிய சாலை என்பதால் பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்பவர்கள் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டது..
கடந்த வாரம் கொரட்டூரில் திடீரென பள்ளம் ஏற்பட்டு சாலையில் சென்று கொண்டிருந்த கார் சிக்கிக்கொண்டது குறிப்பிடத்தக்கது..