தமிழகத்தில், மாணவர் சேர்க்கை முற்றிலும் இல்லாத காரணத்தால் 207 அரசு பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இந்த பள்ளிகளில் ஒரு மாணவர் கூட சேராததால், இந்த ஆண்டு முதல் செயல்படாத நிலையில் உள்ளன.
தமிழகத்தில் மொத்தம் 31,332 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இதில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை சுமார் 18.46 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர். இருப்பினும், பல பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் உள்ளது.
இதுகுறித்து கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், "கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்தது. ஆனால், கொரோனாவுக்கு பிறகு, பெற்றோர் மீண்டும் தனியார் பள்ளிகளை நாட தொடங்கியுள்ளனர். இதன் விளைவாக, அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைந்து வருகிறது" என்றார்.
மாணவர்கள் எண்ணிக்கை பூஜ்ஜியமாக உள்ள இந்த 207 பள்ளிகளில் பணியாற்றிய ஆசிரியர்கள், அருகிலுள்ள மற்ற பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.