தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான கொடுஞ்செயல்கள் அதிகரித்தவாறே உள்ளது. ராயப்பேட்டையில் தாய், மகள்கள் உள்ளிட்ட 4 பேர் கொடூரமாக கொல்லப்பட்டது தெரியவந்த அதே நாளில் தமிழகத்தையே உலுக்கியது சுவாதி படுகொலை.
இதனையடுத்து பெண்களின் பாதுகாப்பு குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்தன. சுவாதி படுகொலையின் பரபரப்பு இன்னமும் அடங்காமல் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் மற்றுமொரு கொடூர சம்பவம் நடந்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் 25 வயது வாலிபர் ஒருவர் 11 வயதான 6-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்து, கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது.
தந்தை இறந்து விட்டதால் தாயுடன் வசித்து வந்த சிறுமி காளீஸ்வரி மாலையில் நீண்ட நேரமாகியும் பள்ளியில் இருந்து வீடு திரும்பாததால் பள்ளிக்கு சென்று விசாரித்தார் அவரது தாய் ஜெயா.
அப்போது சிறுமி காளீஸ்வரியை அவரது வீட்டின் அருகே வசிக்கும் 25 வயது வாலிபர் கார்த்திக் பைக்கில் அழைத்து சென்றது தெரியவந்தது. செல்போன் மூலம் கார்த்திக்கை ஜெயா தொடர்பு கொண்டபோது, மாணவி காளீஸ்வரியை அவர் கடத்தி கொன்று புதைத்து விட்டதாக கூறினார்.
கார்த்திக்கை மீண்டும் தொடர்பு கொள்ள முயன்ற போது அவரது மொபைல் அனைத்து வைக்கப்பட்டது. இதனையடுத்து ஜெயா மானாமதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட காவல்துறைக்கு கண்மாய் கரையில் கழுத்து அறுபட்ட நிலையில், கார்த்திக் உயிருக்கு போராடியபடி கிடக்கும் தகவல் கிடைத்தது. விரைந்து சென்று கார்த்திக்கை மீட்ட காவல் துறை அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் கண்மாய் அருகே கிடந்த போது அவரது அருகில் விஷ பாட்டில் ஒன்றும் கிடந்தது.
சிறுமியை இரவு முழுவதும் கார்த்திக் கிடந்த கண்மாயை சுற்றி தேடிவந்தனர். அதிகாலையில் மாணவி காளீஸ்வரி புதைக்கப்பட்ட இடத்தை கண்டுபிடித்து பிணமாக மீட்டனர். மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கொலைக்கான காரணம் என்ன என்பது இன்னமும் தெரியவில்லை. கார்த்திக் மாணவி காளீஸ்வரியை பலாத்காரம் செய்து கொடூரமாக கொன்று, புதைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மேலும் காவல் துறைக்கு பயந்து கார்த்திக் தனது கழுத்தை அறுத்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.