விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கூமாபட்டி பிளவக்கல் அணையை சுற்றுலா தலமாக மேம்படுத்த, தமிழக அரசு ரூ. 10 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு, இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் சிலர் கூமாபட்டி அணையை பதிவிட்ட வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனால் அப்பகுதிக்கு அதிக சுற்றுலாப்பயணிகள் வர தொடங்கினர். மழைக்காலத்தில் மட்டுமே இந்த அணை ரம்மியமாக காட்சியளிக்கும் என்று பொதுப்பணித்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்த சூழலில், முதலமைச்சர், கூமாபட்டி பிளவக்கல் அணையில் ரூ. 10 கோடி மதிப்பீட்டில் பூங்கா மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்திருந்தார். அதற்கான திட்ட அறிக்கை அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், தற்போது நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிதி மூலம், அணையினை சுற்றி பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் நடைபெறவுள்ளன. அவற்றுள், சுற்றுச்சுவர், நுழைவு வாயில், நடைபாதை, குழந்தைகள் விளையாடும் இடம், திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடம், மற்றும் செல்ஃபி எடுப்பதற்கான இடம் ஆகியவை அமைக்கப்பட உள்ளன. இந்த மேம்பாட்டுப் பணிகள், கூமாபட்டி பிளவக்கல் அணையை ஒரு முக்கிய சுற்றுலா இடமாக மாற்றி, அப்பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.