நவராத்திரி விழாவின் சிறப்பு அம்சம் கொலு வைப்பதே ஆகும். கொலு என்பது பல படிகளை கொண்ட மேடையில் பலவித பொம்மைகளை நேர்த்தியாக அலங்கரித்து வைப்பது என்பது பொருளாகும்.
ஐம் பூதங்களில் ஒன்றான மண்ணினால் செய்யப்பட்ட பொம்மைகளை சக்தியின் அம்சங்களாக எண்ணி நவராத்திரியில் பூஜிப்பவர்களுக்கு சகல நலங்களையும் தருவேன் என்று அம்பிகையே கூறியிருக்கின்றார்.
கொலு வைத்து வழிபடுவது குடும்பத்திற்கு வளம் சேர்க்கும் என்பது ஐதீகம். நவராத்திரி கொலுவில் ஒவ்வொரு ஜீவராசிகளும் பெற்றுள்ள அறிவின் அடிப்படையில் கீழ்பகுதியில் இருந்து பொம்மைகளை அடுக்க வேண்டும். முதல் படியில் ஓரறிவு கொண்ட புல், செடி, கொடிகளையும், 2 ஆம் படியில் ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகளையும், 3 ஆம் படியில் மூன்றறிவு உயிர்களான கரையான், எறும்பு போன்றவற்றின் பொம்மைகளையும் அடுக்க வேண்டும்.
4ஆம் படியில் நண்டு, வண்டு போன்றவற்றின் பொம்மைகளையும், 5ஆம் படியில் விலங்குகள், பறவைகளின் பொம்மைகளையும், 6ஆம் படியில் மனிதர்களின் உருவபொம்மைகளையும் வைக்கலாம். 7ஆம் படியில் சித்தர்கள், ரிஷிகளின் பொம்மைகளையும், 8ஆம் படியில் தேவர்கள், நவக்கிரக அதிபதிகள் பொம்மைகளையும் அடுக்கலாம். 9 ஆம் படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் பொம்மைகளை வைக்கலாம். அதன் நடுவில் ஆதிபராசக்தியை கொலுவின் அதிபதியாக வைத்து வழிபட வேண்டும்.