ஒவ்வொருவருக்கும் பற்கள் ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும் இல்லாவிட்டால் அதனாலேயே நிறைய உடல்நல பிரச்ச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். அதற்கு தினமும் இரண்டு வேளை பற்களை துலக்கினால் மட்டும் போதாது. உணவை சாப்பிட்டவுடன் வாயை கொப்பளிக்க வேண்டும்.
பல்லில் ஏற்பட்ட குழி தொற்றுக்குள்ளாகும் போது பல்வலி ஏற்படுகிறது. பல்லின் வேர் முனையை தொற்று அடைந்து சீழ் கட்டும்போது வலி தாக்க முடியாத அளவு ஏற்படுகிறது.
வலியுள்ள பல்லின் மீது திரிகடுகுப் பொடியை வைத்து சிறிது நேரம் அழுத்திப் பிடித்திருந்தால் வாயினின்று உமிழ்நீர் கூடுதலாக வெளியேறும். வலி தணியும். 2 முறை வீதம் ஓரிரு நாட்கள் செய்தால் நன்கு பயனளிக்கும்.
பல் கூச்சத்தை பேக்கிங் சோடா கொண்டு சரிசெய்ய முடியும். அதற்கு ஒரு டம்ளர் நீரில் 1 சிட்டிகை பேக்கிங் சோடாவை சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு 2 வாரத்திற்கு ஒருமுறை வாயைக் கொப்பளிக்க பல் கூச்சத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
தினமும் காலையில் பற்களைத் துலக்கும் முன் தேங்காய் எண்ணெய் வாயில் ஊற்றி 5 நிமிடம் கொப்பளித்து துப்ப வேண்டும். இம்முறையால் பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
ஒரு துண்டு சுக்கை கால் லிட்டர் நீரில் போட்டுப் பாதியாகக் காய்ச்சி பால், சர்க்கரை சேர்த்து காலை மாலை சாப்பிட்டு வர பல் வலி தீரும். பற்களில் தொற்று ஏற்படாதவாறு உணவுத் துணுக்குகளை அகற்றி பற்களை சுத்தம் செய்ய வேண்டும். பல்துலக்க உப்பையே நன்கு பொடித்தும் பயன்படுத்தலாம்.
ஆலமரத்துப் பட்டையை பொடி செய்து பல் துலக்கி வந்தால் பல் வலி, பல் கூச்சம் உள்ளிட்ட பல் பாதிப்புகளுக்கு தீர்வு கிடைக்கும். இஞ்சி சாற்றில் தேன் கலந்து குடித்தால் பல் வலி குணமாகும். உப்புடன் கொய்யா இலையைச் சேர்த்து அரைத்து, உலர்த்திப் பொடி செய்து பின்னர் பல் துலக்கலாம். இதன் மூலம் பல் வலி மற்றும் ஈறு வீக்கம் குணமாகும்.
அக்காலத்தில் பற்களைத் துலக்குவதற்கு வேப்பங்குச்சியைப் பயன்படுத்தி வந்தனர். வேப்பங்குச்சியைக் கொண்டு தினமும் பற்களைத் துலக்கலாம் அல்லது வேப்பிலையை நீரில் போட்டு நன்கு கொதிக்க விட்டு, அந்த நீரால் தினமும் மூன்று வேளை வாயைக் கொப்பளித்து வாருங்கள்.
கிராம்பு, கொட்டைப் பாக்கு ஆகியவற்றை சம அளவில் எடுத்து பொடி செய்து பல் துலக்கினால் பல்வலி மறையும். கொய்யா இலையை மென்று தின்று வெந்நீரில் வாய் கொப்பளித்தால் பல் கூச்சம் விலகும்.