ஆப்பிளைப் போன்றே அதிக சத்துக்களைக் கொண்ட பழம் தான் பேரிக்காய். பேரிக்காயை நம் நாட்டின் ஆப்பிள் என்று கூடச் சொல்வார்கள். பேரிக்காயில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. மேலும் இதனில் குறைந்த அளவு கலோரிகளே உள்ளது.
இப்பழத்தினை உணவிற்கு முன் சாப்பிட்டால் உணவில் உள்ள கொழுப்பு உடலில் தங்குவதைத் தவிர்த்து உடல் எடையிலும் மாற்றத்தை உண்டாக்குகிறது.
திடீரென இதயம் சிலருக்கு படபடக்கும். மனதில் அச்சம் தோன்றும், வியர்வை ஏற்படும், கை, கால் உதறும் இப்படிப்பட்டவர்கள் பேரிக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டால் இந்தப் பலவீனங்கள் நீங்கும்.
பேரிக்காயில் நார்ச்சத்துக்களோடு சேர்த்து கேட்டிசின்ஸ் மற்றும் ஃப்ளாவனாய்டுகள் எனப்படும் குறிப்பிடத் தக்க இரு வகையான உயிர் வளியேற்ற எதிர்ப்பொருள்கள் (ஆண்டிஆக்ஸிடண்ட்) உள்ளன. இவற்றின் மூலம் பேரிக்காய் உண்ணும் உணவில் உள்ள கொழுப்பு வயிற்றில் சேராமல் தடுக்கும் என்று சில ஆய்வு முடிவுகள் குறிப்பிடுகின்றன.
சிறுநீரகக் குறைபாடு உள்ளவர்களுக்கு இது மிகச்சிறந்த கனி. சிறுநீரை வெளியேற்றவும், பலவீனமான சிறுநீரகச் செயல்பாட்டைச் சரிசெய்யவும், உடலின் அதிகப்படியான நீரை வெளியேற்றி சுத்தப்படுத்தவும் உதவுகிறது.
பேரிக்காய் சாப்பிடுவதால் எலும்புகள், பற்கள் பலப்படும். இதயம் வலுவாகும். இரைப்பை, குடல், பிற ஜீரண உறுப்புகளை பலமாக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.
அன்றாடம் பேரிக்காய் சாப்பிடுவதால் அடிக்கடி உண்ணும்போது நல்ல பசியும், ஜீரணமும் ஆகும். வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் ஆற்றல் பேரிக்காய்க்கு உண்டு.
பேரிக்காய் தோலின் துவர்ப்புத் தன்மைதான் இதன் பலமே. பேரிக்காயைத் தோலுடன் சாப்பிடும்போது அது இதயநோயை கட்டுப்படுத்துகிறது. இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், டைப் 2 சர்க்கரை நோய்க்கான வாய்ப்பை குறைக்கிறது.
யூரிக் அமிலம் உடலில் அதிகமாக சுரந்து, அது உடலிலிருந்து வெளியேறுவதில் சிரமம் ஏற்பட்டால் கணுக்காலில் வீக்கம் ஏற்படும். இந்த யூரிக் அமிலத்தை வெளியேற்றும் ஆற்றல் பேரிக்காய்க்கு உள்ளது.