பல்வேறு மருத்துவத் தன்மைகளை தன்னகத்தே கொண்டுள்ளதால் இது மருத்துவத் தாவரமாகவும் விளங்குகிறது. மட்டுமின்றி வெந்தயத் தழை சிறந்த கீரையாகவும் பயன்படுத்தப் படுகிறது. முற்காலத்திலிருந்தே வெந்தயம் உணவு வகைகளில், மணமூட்டவும், சுவையூட்டவும் பயன்படுத்தப்படுகிறது.
உணவுப் பொருளுக்கு மணத்தை ஊட்டுவது மட்டுமின்றி, சத்துக்களையும் தருகிறது. கறி, கூட்டு, தோசை, இட்லிகளிலும், சாம்பார்பொடி, ரசப்பொடி, மல்லி, மஞ்சள் இவைகளோடு சேர்த்து பயன்படுத்தப்படுகிறது.
இரவில் வெந்தயத்தை அரிசி கஞ்சியில் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வலி தீரும்.
வெந்தயத்தை வறுத்து, நீர் விட்டு காய்த்து தேன் சேர்த்து சாப்பிட வயிற்று கடுப்பு தீரும்.
திடீரென ஏற்படும் வயிற்று வலிக்கு வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடியாக்கி மோரில் கலந்து குடிக்க தீரும்.
ஐந்து கிராம் வெந்தயம், பூண்டு, பெருங்காயம், முருங்கை ஈர்க்கு இலைகளை எடுத்து நீர் சேர்த்து அரைத்து, நீரை வடிகட்டி, மூன்று வேளை ஒரு அவுன்ஸ் வீதம் குடிக்க வயிற்று கடுப்பு தீரும்.
இரவில் வெந்தயத்தை தயிரில் ஊற வைத்து, காலையில் அரைத்து சிறிதளவு தேன் சேர்த்து சாப்பிட வயிற்றுப் போக்கு தீரும்.
வெந்தயத்தை நீராகாரத்தில் ஊற வைத்து இரவில் படுக்கும் முன் சாப்பிடவும். தோசைக்கு சேர்க்கும் உளுந்துடன் சிறிதளவு வெந்தயம் சேர்க்க பலம் ஏற்படும்.
20 கிராம் வெந்தயம் 50 கிராம் வெங்காயம் இரண்டையும் அரை லிட்டர் விளக்கெண்ணையில் காய்த்து, வடிகட்டி, பாலில் அரை கரண்டி எண்ணெய் விட்டு காலையில் இருபது நாட்கள் குடிக்க கணைச்சூடு தீரும்.
100 கிராம் வெந்தயத்தை வறுத்து, பொடியாக்கி, 200 கிராம் சர்க்கரை சேர்த்து உண்ண பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வயிற்று வலி, இடுப்பு வலி நீங்கும். வெந்தயத்தை கஷாயமாக்கி குடித்தாலும் வலி தீரும்.
200 கிராம் வெந்தயத்தை பாலில் ஊற வைத்து, மீண்டும் இளநீரில் ஊற வைத்து, உலர்த்தி பொடியாக்கி, கற்கண்டை சேர்த்து, காலை உணவுக்குப் பின் ஒரு கரண்டி சாப்பிட்டு சுடுநீர் அல்லது பால் சாப்பிட்டு வர (40 நாள்) உடல் பலம் ஏற்படும். ஆரோக்கியம் பெருகும்.
ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து பருவில் பூச பரு மறையும்.
தேங்காய் எண்ணையில் வெந்தயம், கற்பூரத்தை போட்டு ஊற வைத்து தேய்த்து குளிக்க பேன், பொடுகு ஒழியும். பாலில் ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து தேய்த்து குளிக்க பேன், பொடுகு தீரும்.
வெந்தயம், பாசிப்பயறு இவற்றை இரவு ஊற வைத்து காலையில் அரைத்து உடலில் தேய்த்து குளிக்க கற்றாழை நாற்றம் நீங்கும். இதை தலையில் தேய்த்து குளிக்க முடி உதிராது. கண் குளிர்ச்சி ஏற்படும். தலைச்சூடு நீங்கும். பேன், பொடுகு, அரிப்பு நீங்கும்.
வெந்தயத்தை மாவாக்கி, இனிப்பு சேர்த்து களி போல கிளறி உண்டு வர தோல் நோய்கள் நீங்கும். உடல் சூட்டையும் கட்டுப்படுத்தும்.