பூஜை செய்தால் பெற்றோர்கள் சம்மதத்துடன் காதல் திருமணம் நடக்கும் என்று போலி ஜோதிடர் கூறியதை நம்பி, பெங்களூரைச் சேர்ந்த இளம் பெண் லட்சக்கணக்கில் ஏமாந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரைச் சேர்ந்த 26 வயது இளம் பெண், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவர், தனது திருமணம் காதல் திருமணமா, இல்லை பெற்றோர் ஏற்பாடு செய்த திருமணமா என்பதை அறிந்து கொள்ள ஆர்வம் கொண்டார்.
இதனை அடுத்து, இன்ஸ்டாகிராமில் "ஜோதிட நிபுணர்" என பதிவு செய்து வைத்திருந்த விஜயகுமாரை தொடர்பு கொண்டு, தனது சந்தேகங்களை கேட்டுள்ளார். அவரும் அவரது ஜாதகத்தை பார்த்து, "உங்களுக்கு பெற்றோரின் சம்மதத்துடன் காதல் திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளது. ஆனால், சில பிரச்சனைகள் உங்கள் ஜாதகத்தில் உள்ளன. அதனால், பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளார்.
இதனை நம்பிய இளம் பெண், அவ்வப்போது அவர் கேட்ட பணத்தை வழங்கி வந்தார். ஒரு கட்டத்தில், ஆறு லட்சம் ரூபாய் வரை அவர் பணம் பெற்றதாக தெரிகிறது. பின்னர் தான், ஏமாற்றப்பட்டிருப்பதை உணர்ந்த அந்த பெண், போலி ஜோதிடரிடம் தனது பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று கேட்டார்.
ஆனால், "தன்னிடம் பணம் இல்லை" என்று கூறி, 13,500 ரூபாய் மட்டும் திருப்பிக் கொடுத்துள்ளார். மேலும், "இதற்கு மேல் பணம் கேட்டால், தற்கொலை செய்து கொள்வேன்" என்று மிரட்டியுள்ளார்.
இதையடுத்து, பெங்களூரு போலீசில் இளம் பெண் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில், போலி ஜோதிடரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.