திருமணத்தின் பெயரில் ஆண்களை ஏமாற்றும் பெண்கள் சம்பவங்கள் கடந்த காலத்திலும் இருந்தாலும், தற்போது ராஜஸ்தானில் நடந்தது அதைவிட கொடூரம். அனுராதா ஹேக் என்ற இளம்பெண், கடந்த 7 மாதங்களில் 25 பேரை திருமணம் செய்து ஏமாற்றியுள்ளார்.
அனுராதா, சமூக வலைதளங்கள் மற்றும் திருமண தரகர்கள் வழியாக தனது வலையை விரித்துள்ளார். திருமணத்திற்காக விருப்பமுடன் பெண்களை தேடும் ஆண்களை குறிவைத்து, அவர்களுடன் சட்டப்படி பதிவு திருமணம் செய்து, சில நாட்களில் நகை, பணம் மற்றும் விலைமதிப்புள்ள பொருட்களை எடுத்துக்கொண்டு மாயமாகி வந்துள்ளார்.
இது குறித்து விசாரணை நடந்தபோது, சவாய் மாதோப்பூர் பகுதியைச் சேர்ந்த விஷ்ணு சர்மா என்ற நபர் புகார் அளித்ததை தொடர்ந்து, அனுராதாவின் நடமாட்டங்கள் வெளிச்சத்திற்கு வந்தன. அவர் ஒருவரிடம் திருமணம் செய்து, இன்னொருவரிடம் திருமணம் செய்வதையே வழக்கமாக கொண்டுள்ளார்.
போபாலில் ஒரு போலீஸ் கான்ஸ்டபிளை வருங்கால மாப்பிள்ளையாக காட்டி, 26வது திருமணம் செய்ய முயன்றபோது அவர் கைது செய்யப்பட்டார். கைதான பின் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அனுராதா ராஜஸ்தான், உத்தரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மோசடி செய்துள்ளதாக தெரியவந்தது.
மணமகளாக நடித்து, நம்பிக்கையுடன் வீட்டுக்குள் நுழைந்து, சில நாட்களில் கொள்ளை அடித்து ஓடுவதை அனுராதா தனது "தொழில்முறை" என மாற்றி விட்டார். இது போன்ற சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நடக்கக்கூடாது என்பதற்காக, சீரான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.