சி.பி.எஸ்.இ வினாத்தாளில் மிகவும் தாழ்த்தப்பட்ட ஜாதி எது என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது சிபிஎஸ்.இ. மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சி.பி.எஸ்.இ 6ஆம் வகுப்பு சமூக அறிவியல் மாணவர்களுக்கான கேள்வித்தாளில் இந்துமத வர்ணாசிரமத்தின்படி மிகத் தாழ்ந்த சாதி எது என்ற கேள்வி இடம் பெற்றுள்ளது. இந்த கேள்வி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.
மேலும் இந்தக் கேள்விக்கான விடைகளாக பிராமணர்கள், சூத்திரர்கள், சத்திரியர்கள், வானப்ரஸ்தர்கள் ஆகிய 4 பதில்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்றை மாணவர்கள் விடையாக தேர்வு செய்ய வேண்டும்
6ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இல்லை என்பதால் இந்த கேள்வியை தேர்வு நடந்த பள்ளியின் ஆசிரியர் ஒருவர்தான் தேர்வு செய்திருக்க வேண்டும். ஆனால் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இந்த வினாத்தாள் எந்த பள்ளியின் வினாத்தாள் என்று இதுவரை தெரியவில்லை.
இந்த கேள்வி என்.சி.இ.ஆர்.டி எனப்படும் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் வெளியிட்டுள்ள பாடநூலின் அடிப்படையில் தான் கேட்கப்பட்டுள்ளது என்றாலும் இதுபோன்ற கேள்விகள் மாணவர்கள் மத்தியில் பாகுபாட்டை வளர்க்கும் என்பதால் இவ்வகை கேள்விகளை தவிர்க்க வேண்டும் என்று கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.