கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் டெல்லியில் வாரத்தில் இரு நாள்கள் முழு ஊரடங்கு செயல்படுத்தப்படுகிறது.
இந்தியா முழுவதும் ஒமிக்ரான் மற்றும் டெல்டா ஆகிய இரண்டு வகை வைரஸ்கள் வேகமாக பரவ தொடங்கியுள்ள நிலையில் தினசரி பாதிப்புகள் 2.5 லட்சத்திற்கும் மேல் அதிகரித்துள்ளன. இதனால் மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.
இந்நிலையில் டெல்லியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. இதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஊரடங்கு நாட்களில் செயல்பட அனுமதிக்கப்பட்ட அலுவலகங்கள் தவிர அனைத்து தனியார் நிறுவனங்களையும் மூடவும், பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரியும் நடைமுறையை அமல்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் அனைத்து உணவகங்கள் மற்றும் பார்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், உணவகங்களில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து தற்போது டெல்லியில் வார இறுதி நாட்கள் ஊரடங்கு நேற்றிரவு (ஜனவரி 14) 10 மணியளவில் தொடங்கியது. இதனால் 55 மணி நேரத்துக்கு அதாவது திங்கள் கிழமை காலை 5 மணி வரை அத்தியாவசியமற்ற செயல்பாடுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.