பிரியங்கா காந்தி எம்பியாக ஆக இருக்கும் வயநாடு பகுதியில் நாளை கடை அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, காட்டு யானை தாக்குதலில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நாளை வயநாட்டில் கடை அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
நீண்ட காலமாக வனவிலங்கு பிரச்சனை நீடித்து வருவதாகவும், இந்த பிரச்சனைக்கு தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதன் காரணமாக, நாளை கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
காட்டு விலங்குகளிடமிருந்து விவசாயிகளை காப்பாற்ற வனத்துறை தவறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், இந்த பிரச்சனைக்கு உரிய நடவடிக்கை எடுக்கும் வரை எங்கள் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கும் என்று போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ள ஜார்ஜ் என்பவர் கூறியுள்ளார். "நாங்கள் யாரையும் சாலையிலிருந்து விலகி இருக்க கட்டாயப்படுத்த மாட்டோம், ஆனால் சமூகத்துடன் ஒற்றுமையாக அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
"இன்னொரு உயிர் வனவிலங்குகளால் பறிபோவதற்கு முன்பு உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.