ஆந்திர மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத்திற்கான தேர்தலும் நடைபெறுவதால் அங்கு தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. ஆந்திராவில் ஆட்சியை பிடிக்க தெலுங்கு தேசமும், பாஜகவும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியும் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றன.
ஆந்திர நிலைமை குறித்து கூறும் கருத்துக்கணிப்புகள் அனைத்தும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக இருப்பதால் ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திராவின் அடுத்த முதல்வர் பதவியை அடைவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதன் அடையாளமாக முக்கிய நடிகர்கள் பலர் ஜெகன்மோகனின் கட்சியில் இணைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தில் உள்ள கிழக்கு கோதாவரி மாவட்டம் மந்தபேட்டை என்ற பகுதியில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று மாலை தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்பொழுது அங்கிருந்த நகராட்சி வணிக வளாக கட்டிடத்தின் மீது பலர் ஏறி நின்று கொண்டு ஜெகன்மோகனின் பேச்சை கேட்டனர்.
அந்த சமயத்தில் திடீரென கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி 50 பேர் காயமடைந்ததாகவும், காயம் அடைந்த அனைவரும் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.