இந்தியாவின் புதிய துணை குடியரசு தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் சி.பி. ராதாகிருஷ்ணனும், எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணி சார்பில் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி பி. சுதர்சன் ரெட்டியும் போட்டியிடுகின்றனர்.
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்ள மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களால் நடத்தப்படுகிறது. தற்போது, நாடாளுமன்றத்தில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 788 ஆக உள்ளது. ஆனால், 7 இடங்கள் காலியாக உள்ளதால், மொத்த வாக்காளர்கள் 781 பேர். இதில் வெற்றி பெற 391 வாக்குகள் தேவை.
தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 422 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. இது வெற்றிக்கு தேவையான 391 வாக்குகளை விட அதிகமாகும். இதனால், NDA வேட்பாளரான சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
அதே சமயம், எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கட்சிகள், குறிப்பாக பிஜு ஜனதா தளம் மற்றும் பிஆர்எஸ் கட்சிகள் தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளன. இது, சி.பி. ராதாகிருஷ்ணனின் வெற்றி வாய்ப்பை மேலும் வலுப்படுத்துகிறது.