பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை என்ற பெயரில் அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்கள் நீக்கப்பட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வரும் நிலையில், இது குறித்து உச்ச நீதிமன்றம் முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது. "வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத்த நடவடிக்கை என்ற பெயரில் அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டால், அதில் நாங்கள் உடனே தலையிடுவோம்" என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
தேர்தல் ஆணையத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் ஆகஸ்ட் மாதம் இறுதி விசாரணை மேற்கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த மனுக்கள் ஆகஸ்ட் 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் விசாரிக்கப்பட உள்ளன.
வழக்கின் விசாரணையின் போது நீதிபதிகள், வாக்காளர்களை ஒழுங்குபடுத்த தேர்தல் ஆணையத்திற்கு சட்டப்படியான உரிமை உள்ளது என்பதை ஒப்புக்கொண்டனர். ஆனால், அதே நேரத்தில், "அதில் தவறு நிகழ்ந்தால், அது குறித்து நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வரலாம். அது குறித்து விசாரணைகளை செய்ய உச்ச நீதிமன்றம் தயாராக இருக்கிறது," என்றும் நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
வரைவு வாக்காளர் பட்டியல் வெளிப்படைத்தன்மையுடன் இல்லை என்றால், அது குறித்தும் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரலாம் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர். இந்த எச்சரிக்கை, வாக்காளர் பட்டியலில் நிகழக்கூடிய முறைகேடுகளை தடுக்க உச்ச நீதிமன்றம் தீவிரமாக உள்ளது என்பதை காட்டுகிறது. பீகார் தேர்தல் வரவிருக்கும் நிலையில், இந்த விவகாரம் முக்கியத்துவம் பெறுகிறது.